பிஎம் சூர்யா கர் இலவச மின்சாரத் திட்டம் மூலம், உங்கள் வீட்டின் கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தி மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்கலாம இதன் மூலம் குடும்ப செலவுகளைக் குறைத்து, பசுமை ஆற்றலை ஊக்குவிக்க முடியும்.

நாம் அனைவரும் தண்ணீர் சூடாக்க சோலார் ஹீட்டரைப் பயன்படுத்துவது பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் அதே சூரிய ஒளியை பயன்படுத்தி நேரடியாக மின்சாரம் உற்பத்தி செய்வதை பலர் சிந்தித்திருப்பதில்லை. உண்மையில், கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தினால், உங்கள் மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்கலாம்.

பிஎம் சூர்யா கர் திட்டம் என்ன?

2024 பிப்ரவரி 13-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி “பிஎம் சூர்யா கர் – இலவச மின்சாரத் திட்டம்” எனும் முக்கியத் திட்டத்தை அறிவித்தார். இந்த முயற்சியின் நோக்கம், சாதாரண குடும்பங்களுக்கும் மலிவு மின்சாரம் கிடைக்கச் செய்வது.

அரசின் இலக்கு

இந்த திட்டத்தின் மூலம், ஒரு கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க அரசின் திட்டம் உள்ளது. இதனால், பல குடும்பங்களுக்கு பெரிய அளவில் செலவுச் சேமிப்பு ஏற்படும்.

மானியம் எவ்வளவு கிடைக்கும்?

அரசு, சோலார் பேனல் பொருத்துவோருக்கு பெரும் மானியம் வழங்குகிறது.

1 முதல் 2 கிலோவாட் வரை அமைப்பின் மீது ரூ.30,000 – ரூ.60,000 வரை

2 முதல் 3 கிலோவாட் வரை அமைப்பின் மீது ரூ.60,000 – ரூ.78,000 வரை

3 கிலோவாட் மேல் திறனுக்கு அதிகபட்சமாக ரூ.78,000 வரை மானியம் கிடைக்கும்.

மின் கட்டணம் பூஜ்ஜியம்

நீங்கள் 2 முதல் 3 கிலோவாட் சோலார் பேனல் அமைத்தால், மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவீர்கள். இதனால், மாதாந்திர மின் கட்டணத்தை முழுமையாக குறைக்க முடியும். கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்தால், அதை மின்சார வாரியத்திற்கே விற்பனை செய்யலாம்.

குடும்ப செலவுக்கு நிவாரணம்

மின் கட்டணம் இல்லாததால், மாதந்தோறும் ஒரு பெரிய தொகையை சேமிக்கலாம். இதனை வீட்டு தேவைகள், கல்வி, முதலீடு அல்லது சேமிப்புக்கு பயன்படுத்த முடியும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது ஆகும்.

1. [pmsuryaghar.gov.in](https://pmsuryaghar.gov.in) என்ற தளத்தில் பதிவு செய்யவும்.

2. உள்நுழைந்து தேவையான தகவல்களை நிரப்பவும்.

3. தொழில்நுட்ப அங்கீகாரம் கிடைத்த பிறகு பேனல் பொருத்தவும்.

4. பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே பேனல் பொருத்தினால் மானியம் கிடைக்கும்.

சில எளிய படிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீடு முழுவதும் இலவச மின்சாரத்தில் இயங்கும். இந்த சூரிய ஆற்றல் திட்டம், நாட்டின் பசுமை ஆற்றலையும் ஊக்குவிக்கும்.