சிங்கப்பூரில் உள்ள 'தி ரிசர்வ்' என்ற ரகசியக் கிடங்கில், ரூ.13,000 கோடி மதிப்புள்ள தங்கம்  சேமிக்கப்பட்டுள்ளது. 500 சிசிடிவி கேமராக்கள் மற்றும் பலத்த பாதுகாப்புடன் கூடிய இந்தக் கிடங்கு, உலகின் மிக உயர்தர சேமிப்பு வசதிகளை வழங்குகிறது.

உலகின் பெரிய சேமிப்பு கிடங்கு!

தினமும் தங்கம் விலை கிராமுக்கு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதையே பிரமிப்பாக பார்த்து, தங்கம் வாங்கும் நம்மால் ஒரே இடத்தில் கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் கொட்டி கிடக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. ஆம் கிட்டத்தட்ட 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கோடீஸ்வரர்கள் பலர் பத்திராக ஒரே இடத்தில் சேமித்து வைத்துள்ளனர். அதுவும் பலத்த பாதுகாப்புடன்.

அழகிய குட்டி நாடான சிங்கப்பூர் சர்வதேச சுற்றுலா பயணிகள் கூடும் இடமாக விளங்குகிறது. தென் இந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு பணியாற்றி வருகின்றனர். நம்மோடு நெருங்கிய தொடர்புடைய சிங்கப்பூரில் உலகின் செல்வந்தர்கள் பலரும் தங்கத்தை சேமித்து வைத்துள்ளனர்.

கண்களை கவரும் பிரமாண்டம்

பிரமாண்டமான நட்சத்திர விடுதி போல காட்சித்தரும் அந்த கட்டிடம் அவ்வழியே செல்வோரை திரும்பி பார்க்க வைக்கும். உலகின் செல்வந்தர்கள் பலரும் வாங்கும் தங்கம் அங்குதான் பாதுகாக்கப்படுகிறது என்பது பலருக்கு தெரியாது. சிங்கப்பூரில் உள்ள ஆறு மாடிகளைக் கொண்ட ஒரு ரகசிய கட்டடத்தில்தான், ரூ.13,000 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட பிற விலைமதிப்பற்ற உலோகங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தை "தி ரிசர்வ்" என்று அழைக்கிறார்கள்.

ஜெர்மனி டு சிங்கப்பூர்

பொதுவாகவே வால்ட் (சேமிப்புக் களஞ்சியங்கள்) என்பது ரகசியமான இடங்கள். ஆனால், சிங்கப்பூரின் புதிய தங்க மற்றும் மதிப்பூட்டப்பட்ட உலோகங்களுக்கான சேமிப்பு நிலையமான “தி ரிசர்வ்” (The Reserve) தனது உள்கட்டமைப்பை வெளிப்படையாகக் காட்டுவதால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெர்மனியில் பிறந்து தற்போது சிங்கப்பூரில் வாழும் கிரெகோர் கிரெகெர்சன் (Gregor Gregersen), தி ரிசர்வின் நிறுவனர். அவர் தனது உடலில் 12.5 கிலோ எடையுள்ள ஆபரணங்களை அணிந்துள்ளார். அதனுடைய மதிப்பு தற்போது சுமார் 1.2 மில்லியன் டாலராகும். இந்திய ரூபாய் மதிப்பில் அது மூன்றரை கோடி ரூபாய். தங்கம் என்பது அரசு சார்ந்த மதிப்பிடுதல்களுக்கு உட்பட்டதல்ல என்றும் இது தனக்கென ஒரு உள்ளார்ந்த மதிப்பைக் கொண்டதாகவும் கிரெகெர்சன் கூறுகிறார்.

டன்கணக்கில் தங்கம் சேமிக்கலாம்

தி ரிசர்வ், சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 17,000 சதுர மீட்டர் பரப்பளவுள்ள கட்டடம். இது 2024-ல் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு 500 டன்னுக்கான தங்கம் மற்றும் 10,000 டன்னுக்கான வெள்ளி சேமிக்க முடியும். இது உலகின் மிக உயர்தர சேமிப்பு வசதிகளை வழங்கும் வாலட்களில் ஒன்றாக திகழ்கிறது. பொதுவாக வால்ட் சேமிப்பே முக்கியம் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய சொத்துகளை பாதுகாப்பாக வைப்பதற்காக மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால், தி ரிசர்வ் வெறும் சேமிப்பு இல்லாமல், தங்கம் மற்றும் வெள்ளியை விற்பதும், வாங்கிக் கொள்ளவும் செய்கிறது.

ஒட்டுமொத்தமாக ஒரே நிறுவனம் – வணிகம், வங்கிச் சேவைகள், பாதுகாப்பு சேமிப்பு என அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்குகிறோம் எனவும் அதனால்தான் நாங்கள் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட முடிகிறது என்றும் கிரெகெர்சன் தெரிவித்துள்ளார்.

பழைய கட்டிடடம் புதுப்பிப்பு

முன்பு ஒரு மின்னணு உற்பத்தி நிறுவனமாக இருந்த இந்த கட்டடத்தை 2020-ல் கிரெகெர்சன் வாங்கியபோது, அதனை கலைநயமிக்க பாதுகாப்பு நிலையமாக மாற்ற விரும்பினார். அதன் பின்னர் ஃபிராங்கோபோன் வாஸ்லி லியூ மற்றும் ஜெசிகா பச்ச்கொவ்ஸ்கி ஆகியோரைக் கொண்டு கட்டட வடிவமைப்பை பிரமாண்டமாகவும் அழகாகவும் மாற்றினார். பிரத்தியேகமான வாடிக்கையாளர்களுக்கான தனியார் வாலட் அறைகள் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளன. வெள்ளி வாலட் மட்டும் ஒரு பெரிய 32 மீட்டர் உயரமுள்ள தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் ஓய்வெடுக்கும் அறை மற்றும் ஹோட்டல் இருக்கிறது.

கண்காணிக்கும் 500 சிசிடிவிக்கள்

சிங்கப்பூர் ஏற்கனவே மிகவும் பாதுகாப்பான நாடாக இருந்தாலும், தி ரிசர்வ் மிகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறது. சுவர் தடுப்புகள் மிகவுயர்ந்த பாதுகாப்புடன் உள்ளன. ‘மன்ட்ராப்’ எனப்படும் இரட்டை கதவு பாதுகாப்பு அமைப்பு உள்ளது – உள் கதவு மூடப்பட்ட பிறகே அடுத்தது திறக்கப்படும். மோஷன் சென்சார், லேசர், அலைவீச்சு சென்சார், கம்பி உணர்விகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேவையென்றால் காவல்துறையையும் அழைக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

“பாதுகாப்பு மட்டும் போதாது – நமக்குத் தேவையானது ஸ்டைலும் கூட,” என்று கூறும் கிரெகெர்சன், தங்கத்தின் மதிப்பையும், அதன் பாதுகாப்பையும் சேர்த்து ஒரு கலைவடிவமாக மாற்றியுள்ளார். தி ரிசர்வ், உலகளவில் மதிப்பீட்டுச் சொத்துக்களின் பாதுகாப்பில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.“தங்கத்தின் பாதுகாப்பு என்பது இன்று ஒரு அவசியம் மட்டுமல்ல – அது ஒரு அனுபவம்.”