உயில் எழுதாமலே தந்தை இறந்துவிட்டால்.. திருமணமான பெண்ணுக்கு அவரின் சொத்தில் பங்கு உள்ளதா?
உயில் எழுதாமலே தந்தை இறந்துவிட்டால், திருமணமான பெண்ணுக்கு தனது தந்தையின் சொத்தில் பங்கு கிடைக்குமா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாரிசுரிமை சட்டத்தின் படி தந்தையின் சொத்தில் எப்படி மகன்களுக்கு பங்கு உள்ளதோ அதே போல் மகள்களுக்கும் பங்கு உள்ளதா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். குறிப்பாக அப்பாவுக்கு சுயமாக சம்பாதித்த சொத்து இருந்து, ஒருவேளை அதை உயிலாக எழுதி வைக்கவில்லை எனில் பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு கிடைக்குமா? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
திருமணமான பெண்ணாக இருந்தாலும் சரி, திருமணமாகாத பெண்ணாக இருந்தாலும் சரி எல்லா பெண் பிள்ளைகளுக்குமே அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் பங்குள்ளது. ஹிந்து வாரிசுரிமை (திருத்தியமைக்கப்பட்டது) சட்டம் 2005-ன் படி தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே போல் மகளுக்கும் உரிமை இருக்கிறது. திருமண ஆனாலும், ஆகவில்லை என்றாலும் இந்த விதி பொருந்தும்.
ஒருவேளை தந்தை உயில் எழுதவில்லை எனில் சட்டப்பூர்வ வாரிசுகள் என்று கருதப்படும் நேரடி வாரிசுகளுக்கு, பாலின் வேறுபாடுகளின்றி அவர் சுயமாக சம்பாதித்த சொத்தில் சம பங்கு உள்ளது. ஆனால் திருமணமான பெண்ணின் தந்தை தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கோர முடியாது. ஆனால் அதே நேரம் சுய சம்பாத்யமாக இல்லாமல் பூர்வீக சொத்தாக இருந்தால் அதில் வாரிசுகளுக்கு பங்கு உள்ளது.
பொதுவாகவே சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருக்கும் தந்தைகள், தனது காலத்திற்கு பிறகு பிள்ளைகளிடையே சொத்து பிரச்சனை ஏற்படாமல் இருக்க உயில் எழுதும் பழக்கத்தை கொண்டுள்ளனர். உயிரோடு இருக்கும் போது யாருக்கு எவ்வளவு சொத்து என்று உயில் எழுதுவது சிரமங்களை தவிர்க்க உதவும்.
பான் அல்லது ஆதார் இல்லாமல்.. எவ்வளவு தங்கத்தை வாங்கலாம்? மீறினால் அபராதம் தான்.!!
விவாகரத்தாகி மறுமணமாகாத பெண்ணின் மகனுக்கு கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு உள்ளதா என்பதும் மற்றொரு முக்கியமான சந்தேகம். வாரிசுரிமை சட்டத்தின் படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்குண்டு. எனவே விவாகரத்து ஆகியிருந்தாலும், முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு பிள்ளைகள் இருந்தாலும் இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் பங்கு உள்ளது.