பெண்கள் நிதி சுயநிலையை அடைய தங்கம் மற்றும் எஸ்ஐபி ஆகிய இரண்டு முக்கிய முதலீட்டு வழிகள் உள்ளன. தங்கம் பாதுகாப்பான, நீண்ட கால சேமிப்பாகவும், எஸ்ஐபி ஒழுக்கமான முதலீட்டின் மூலம் அதிக வளர்ச்சி தரும் வாய்ப்பாகவும் விளங்குகிறது.
பெண்கள் இன்று சேமிப்பைத் தாண்டி நிதி சுயநிலையைப் பெற விரும்புகின்றனர். அதற்கான முக்கியமான இரண்டு முதலீட்டுத் தேர்வுகள் உள்ளது. அவை தங்கம் மற்றும் எஸ்ஐபி ஆகும். இவை இரண்டுமே பிரபலமானவை. ஆனால் எந்தப் பாதை உங்களுக்கு சரி என்பதை தெரிந்துகொள்வது புத்திசாலித்தனமான முடிவு ஆகும்.
தங்கம்
பல வருடங்களாக பெண்களின் நம்பிக்கையைப் பெற்ற முதலீடு தங்கம். இது மட்டும் பொருள் அல்ல உணர்வு, பாதுகாப்பு, அவசர தேவையின் ஆதாரம். தங்கத்தின் விலை நீண்ட காலத்தில் ஏறிவரும் தன்மை உள்ளதால், அது பாதுகாப்பான சேமிப்பு வடிவமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சி வேகம் மெதுவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எஸ்ஐபி
எஸ்ஐபி என்பது ஒவ்வொரு மாதமும் சிறிய தொகை முதலீடு செய்து, காலப்போக்கில் பெரிய சொத்து உருவாக்கம் உதவும் முறை. சந்தை மாற்றங்களை தாண்டி, நீண்ட பயணத்தில் பெரும் வருமானம் தரும். ஒழுங்கு, பொறுமை, காலம் ஆகிய இந்த மூன்றும் இருந்தால், எஸ்ஐபி செல்வம் உருவாக்கும் சக்தி அதிகம்.
ஆபத்து அல்லது பாதுகாப்பு
தங்கம் பெரும்பாலும் பாதுகாப்பான முதலீடு. அதன் மதிப்பு முழுவதும் குறைதல் அரிது. ஆனால் எஸ்ஐபி சந்தை ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்படும். எனினும், நீண்ட கால ஆளுமை இருந்தால், எஸ்ஐபி தங்கத்தை விட பல மடங்கு வளர்ச்சி தரும். குறுகிய கால பாதுகாப்புக்கு தங்கமும், நீண்ட கால வளர்ச்சிக்கு எஸ்ஐபியும் சிறந்தது.
வருமான வேறுபாடு
தங்கத்தின் சராசரி ஆதாயம் 8–10%. சில நேரங்களில் அதிகரிக்கும். எஸ்ஐபி-யில் ஈக்விட்டி ஃபண்ட்கள் 12-15% அல்லது அதற்கும் மேலான வளர்ச்சி வழங்கும். டெப்ட் ஃபண்ட்கள் 6–8% அளிக்கும்.
அவசரத்துக்கு பணம்
நகை தங்கத்தை விற்க சற்று சிக்கல் இருக்கலாம். ஆனால் டிஜிட்டல் தங்கம் அல்லது Gold ETF உடனடியாக விற்பனை செய்யலாம். எஸ்ஐபி-யிலுள்ள பணத்தை எப்போதும் பெறலாம், ஆனால் 5-7 ஆண்டுகளாக வைத்திருப்பது அதிக லாபம் தரும். எதிர்பாராத சூழ்நிலையில், இரண்டு வகை முதலீடுகளும் உதவும், வடிவம் மட்டும் மாறும்.
வரி விதிகள்
3 ஆண்டுகளுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் 20% வரி (indexation பயன்பாடு). எஸ்ஐபியில் 1 ஆண்டுக்குள் விற்றால் 15% வரி; 1 ஆண்டுக்குப் பிறகு லாபத்தில் 10% வரி. டெப்ட் ஃபண்ட்களுக்கு சற்றே அதிக வரி விதிக்கப்படும். எனவே சரியான முதலீட்டை, நிதி ஆலோசகரிடம் ஆலோசித்து மேற்கொள்வது அவசியம்.
