ஏப்ரல் 1 முதல் பாஸ்டேக் கட்டணம் அதிரடி உயர்வு.. புதிய ஆண்டு பாஸ் விலை எவ்வளவு தெரியுமா?
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தனிப்பட்ட வாகனங்களுக்கான பாஸ்டேக் ஆண்டு பாஸ் கட்டணம் ஏப்ரல் 1, 2026 முதல் உயர்த்தப்படுகிறது. ஒருமுறை செலுத்தப்படும் இந்த கட்டணம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

பாஸ்டேக் ஆண்டு பாஸ் கட்டணம் உயர்வு
நம் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு ஏப்ரல் 1, 2026 முதல் கூடுதல் செலவு ஏற்படுகிறது. பாஸ்டேக் ஆண்டு பாஸ் கட்டணம் ரூ.3,000 முதல் ரூ.3,075 ஆக உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய கட்டணம் 2026–27 நிதியாண்டுக்காக விதிக்கப்படுவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008ன் படி இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.
எந்த வாகனங்களுக்கு இந்த கட்டணம்?
இந்த பாஸ்டேக் ஆண்டு பாஸ் கட்டணம் வணிக நோக்கமற்ற தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். நாட்டில் உள்ள சுமார் 1,150க்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்களில் இந்த வசதியை பயன்படுத்த முடியும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய எக்ஸ்பிரஸ்வே வழியாக பயணம் செய்பவர்களுக்கு இது பயன்படும். தற்போது இந்தியாவில் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் வாகன உரிமையாளர்கள் இந்த பாஸ்டேக் ஆண்டு பாஸ் வசதியைப் பயன்படுத்துகின்றனர்.
ஒருமுறை கட்டணம்
பாஸ்டேக் ஆண்டு பாஸ் வாங்கிய பிறகு அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஒருமுறை கட்டணம் செலுத்தினால், அந்த பாஸ் ஒரு வருடம் வரை அல்லது 200 டோல் பிளாசாக்களை கடக்கும் வரை செல்லுபடியாக இருக்கும். இது தினசரி அல்லது அடிக்கடி நெடுஞ்சாலை பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
பாஸ் ஆக்டிவேட் செய்வது எப்படி?
பாஸ்டேக் ஆண்டு பாஸை செயல்படுத்தும் நடைமுறையும் மிகவும் எளிதாக உள்ளது. வாகன உரிமையாளர்கள் Rajmarg Yatra மொபைல் ஆப் அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஒருமுறை கட்டணம் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பிறகு சுமார் இரண்டு மணி நேரத்தில் அந்த பாஸ் வாகனத்தின் பாஸ்டேக்-ல் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டம் எப்போது தொடங்கியது?
பாஸ்டேக் ஆண்டு பாஸ் திட்டம் முதன்முதலில் 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம் அறிமுகமான பிறகு வாகன உரிமையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இந்த திட்டம் எளிதான மற்றும் செலவு குறைந்த பயண வசதியை வழங்குகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

