ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் முதல் மழைக்குப் பின்னர், மக்கள் வைரங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு விவசாயிக்கு கிடைத்த வைரம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது, வெளிச்சந்தை மதிப்பு 5 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட முன்னதாகவே தொடங்கி, நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மும்பையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கர்நாடகாவின் பெங்களூருவிலும் மழை கொட்டி வருகிறது. கேரளாவிலும் அதி கனமழை பெய்து வருகிறது.
கர்னூலில் முதல் பருவ மழைக்குப் பின்னர் கிடைக்கும் வைரம்
இந்தநிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் முதல் பருவமழைபெய்தது. இதையடுத்து அங்குள்ள மக்கள் தங்கள் நிலங்களில் வைரங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் மழைக்குப் பிறகு வைரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அங்கு நிலவுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பெய்யும் முதல் மழைக்குப் பிறகு, மக்கள் தங்கள் நிலங்கள், வயல்கள் மற்றும் தோட்டங்களில் மின்னும் வைரங்களை தேடுகின்றனர். இந்த ஆண்டும் மே மாதத்திலேயே முதல் மழை பெய்ததால், மக்கள் வைரங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, விவசாயிகள் தங்கள் வயல்களில் வைரங்களை தேடி வருவது செய்தியாக பரவி வருகிறது. இதையடுத்து, அண்டை கிராம மக்களும் வைரங்களைத் தேடும் பணியில் இணைந்துள்ளனர். மண் குவியல்களை சலித்து, அதில் வைரங்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள துக்கல் கிராமம், இதுபோன்ற வைர வேட்டைக்குப் பிரபலமானது.
கர்னூலில் விவசாயிக்கு கிடைத்த வைரம்
இந்த முறை, கர்னூல் மாவட்டத்தில் உள்ள துக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு தனது வயலில் வைரம் கிடைத்துள்ளது. அதை அவர் ஜோனகிரியில் உள்ள ஒரு வைர வியாபாரிக்கு விற்றுள்ளார். அந்த வியாபாரி, ஒன்றரை லட்ச ரூபாய்க்கு அந்த வைரத்தை வாங்கியுள்ளார். ஆனால், வெளிச்சந்தையில் இந்த வைரத்தின் மதிப்பு 5 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. துக்கல் கிராமத்தைச் சுற்றியுள்ள ஜோனகிரி, சின்ன ஜோனகிரி, எர்ரகுடி, மதனந்தபுரம், கிரிகெட்லா போன்ற பல கிராமங்களில் மக்கள் வைர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்னூல் வைரம் பிரிட்டிஷ் காலத்தில் கண்டுபிடிப்பு
இந்தப் பகுதியில் வைரங்கள் இருப்பது பிரிட்டிஷ் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, ஒரு தனி நிறுவனத்தை அமைத்து, இங்கு ஆய்வுப் பணிகளைத் தொடங்கினர். ஆனால், காலப்போக்கில், இந்த வைர ஆய்வு லாபகரமானதாக இல்லாததால், அரசின் ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், பொதுமக்களின் தேடல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பெய்யும் முதல் பருவமழைக்குப் பிறகு, இங்கு வைரங்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு மே மாதத்திலேயே முதல் மழை பெய்ததால், ஜோனகிரியைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வைர வேட்டை நடைபெற்றுள்ளது. இரவில் அதிக மழை பெய்திருந்தால், இங்கு தேடுபவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும்.
நிலத்துக்கு அடியில் வைரம் இருக்கிறதா?
மழையால், நிலத்தடியில் உள்ள வைரங்கள் மேலே வந்து சேரும் என்று மக்கள் நம்புகின்றனர். இங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார கிராம மக்களும் தங்கள் வாகனங்களில் இங்கு வந்து வைரங்களைத் தேடுகின்றனர். பல நாட்கள் அல்லது வாரங்கள் இங்கேயே தங்கி, தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்கின்றனர். ஜோனகிரியில் கிடைக்கும் வைரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இவற்றின் விலை லட்சத்தில் இருந்து கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. துக்கல் மண்டலப் பகுதியில் உள்ள சிவப்பு மண்ணில் தேடுபவர்களுக்கு 17 முதல் 20 வைரங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மக்கள் தேடி எடுத்த வைரங்களை, இங்குள்ள வியாபாரிகள் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலைக்கு ரகசியமாக வாங்குகின்றனர். வைரத்தின் நிறம், வகை, காரட் ஆகியவற்றைப் பொறுத்து வைரங்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
டெண்டரில் வைரங்கள் விற்பனை
இவற்றை வாங்கும் வியாபாரிகள், பணமாகவோ அல்லது தங்கமாகவோ விலை கொடுக்கின்றனர். வியாபாரிகள் சொல்லும் விலை மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், டெண்டர் முறையில் வைரங்களை வாங்குகின்றனர். மேலும், இங்குள்ள வைர வியாபாரிகள் தங்கள் முகவர்களை இங்கு நிறுத்தி வைத்து, அவர்கள் மூலம் மக்களிடம் பேரம் பேசி வைரங்களை வாங்குகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
