தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி வரி பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கேரளாவுக்கு ரூ.1,956 கோடி வரி பகிர்வு ஒதுக்கப்பட்டுள்ளது. 

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், மாநிலங்கள் தங்கள் மூலதனச் செலவினங்களை (capital spending) விரைவுபடுத்தவும், வளர்ச்சி/நலத் திட்டங்களுக்கான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் உதவும் வகையில் மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வின் (tax devolutஇஒன்) முன் தவணையாக (advance instalment) அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தம் 1,01,603 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி

இதில் தமிழகத்துக்கு 4,144 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ.18,227 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 2வது அதிகப்பட்சமாக பீகார் மாநிலத்துக்கு ரூ.10,219 கோடி வரி விடுவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.7,976 கோடி வரி பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு வங்காளத்துக்கு ரூ.7,644 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.6,418 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.6,123 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளாவுக்கு எவ்வளவு?

மேலும் அசாம் மாநிலத்துக்கு ரூ.3,178 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.4,601 கோடியும், சத்தீஸ்கருக்கு ரூ.3,462 கோடியும் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரூ.3,360 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.4,112 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.3,705 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.2,136 கோடி, மற்றும் கேரளாவுக்கு ரூ.1,956 கோடி வரி பகிர்வு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகம்

மத்திய அரசு விடுவித்த வரி பகிர்வை பார்த்தோமானால் பாஜக ஆளும் உத்தபிரதேசத்துக்கு ரூ.18,227 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்தியில் பாஜக ஆள்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கும் நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்துக்கு ரூ.10,219 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பாஜக ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு குறைவான நிதியே விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.