“எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது..” ஏர்செல் நிறுவனத்தை இழந்தது குறித்து சிவசங்கரன் ஓபன் டாக்..
ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் ஏர்செல் விற்பனை விவகாரத்தில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
2000-களில் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ஏர்செல் நிறுவனம் இருந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த சின்னக்கணன் சிவசங்கரன் என்பவர் ஏர்செல் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். ஏர்செல் நிறுவனம் இந்தியா முழுவதும் வளர்ச்சி கண்டு வந்த நிலையில் 2006-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஆனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மாக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தின் 74% பங்குகளை வாங்கியது.
எனினும் சில ஆண்டுகளிலேயே கடும் சிக்கல்களை சந்திக்க தொடங்கியது ஏர்செல் நிறுவனம். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டி, ஒழுங்கு தடை உள்ளிட்ட காரணங்களால் ஏர்செல் நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டது.
2016-ல் ரூ.120 கோடி லாபம் பெற்ற ஏர்செல் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.120 கோடி நஷ்டத்தை சந்தித்தது. இழப்பும், கடனும் அதிகமாகிக் கொண்டே இருந்ததால் அந்நிறுவனம் திவாலானது. அதன்படி 2018 ஏப்ரல் 15 முதல் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் ஏர்செல் விற்பனை குறித்து பேசி உள்ளார். ராஜ் ஷமானிக்கு அவர் அளித்த பேட்டியில் “ இன்று இருப்பது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இல்லை. வளரும் தொழில் நிறுவனங்கள் பல அழுத்தங்களை எதிர்கொண்டன. இதனால் பல நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்தன. ஏர்செல் விற்பனை விவகாரத்தில் அரசியல்வாதிகள் தலையிட்டதால் என் நிறுவனத்தை இழந்தேன்.” என்று கூறினார்.
மேலும் தனது பங்குகளை மேக்சிஸுக்கு விற்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் சிவசங்கரன் குற்றம் சாட்டினார். அப்போது பேசிய அவர் "இந்த ஒப்பந்தத்தின் மூலம் நான் 3,400 கோடி ரூபாய் மட்டுமே எனக்கு கிடைத்தது., நான் அதை AT&Tக்கு விற்றிருந்தால் எனக்கு 8 பில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கும்" என்று சிவசங்கரன் கூறினார்.
அப்போது என்ன கட்டாயம் என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் “ அன்றைய இந்தியா போல் இன்று இந்தியா இல்லை. இன்று யாரும் உங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. ஆனால் அப்போது தொழில் முனைவோர் "ஒரு குறிப்பிட்ட நபருக்கு நிறுவனத்தை விற்க வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் "இப்போது நீங்கள் ஒரு தொழிலை தொடங்கினால், யாரும் உங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.. இப்போது அது தாராளமயமாக்கப்பட்ட இந்தியா. அவர்கள் என்னை விற்கும்படி கட்டாயப்படுத்தினர் என்பது எனது குற்றச்சாட்டு இல்லை. எனக்கு 8 பில்லியன் வழங்கிய நிறுவனத்திற்கு விற்க அனுமதித்திருக்க வேண்டும் என்பதே எனது புகார்." என்று கூறினார்.