மாருதி சுசுகி தனது புதிய எஸ்யூவியான எஸ்கியூடோவின் டீசரை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 3 அன்று அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெறும். ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக இது வரும்.
மாருதி சுசுகி தனது புதிய எஸ்யூவியான எஸ்கியூடோவின் முதல் டீசரை வெளியிட்டு ஆட்டோமொபைல் உலகில் புதிய ஆர்வத்தை கிளப்பியுள்ளது. வரும் 2025 செப்டம்பர் 3 அன்று அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெற உள்ளது. டீசரில் காட்டப்பட்டுள்ள கூர்மையான எல்இடி டெயில் விளக்குகள், மைய பிரேக் லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் வாகனத்திற்கு ஒரு ஸ்டைலிஷ் தோற்றத்தை வழங்குகின்றன.
இந்த எஸ்யூவி மாருதி அரினா டீலர்ஷிப் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போன்ற நடுத்தர பிரிவு எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாளராக இது வரும். நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் வகையில் எஸ்கியூடோ வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் பிளாட்ஃபார்ம், கிராண்ட் விட்டாராவின் உலகளாவிய C பிளாட்ஃபார்மின் அடிப்படையில் இருக்கும். அண்டர்பாடி CNG டேங்கைக் கொண்ட நிறுவனத்தின் முதல் எஸ்யூவி என்ற பெருமையை எஸ்கியூடோ பெற உள்ளது. கூடுதலாக, Level-2 ADAS (தன்னாட்சி இயக்கி உதவி அமைப்பு) மற்றும் Dolby Atmos ஆடியோ சிஸ்டம் கொண்ட பிராண்டின் முதல் மாடல் இதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களின் பட்டியலில் 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், தானியங்கி ஏசி, ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் பல ஏர்பேக்குகள் இடம்பெறும். மேலும், பவர்டு டெயில்கேட் மற்றும் ஆல்-வீல் டிரைவ் விருப்பங்களும் கிடைக்கும் என்பதால், வாகனத்தின் ப்ரீமியம் தோற்றம் மேலும் உயரும்.
தொடக்க நிலை மாடலின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.10.5 லட்சம் வரை இருக்கும் எனவும், மேம்பட்ட ஹைப்ரிட் வேரியண்டின் விலை ரூ.18 லட்சம் ரூ.19 லட்சம் வரை இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ விலை மற்றும் விவரங்கள் சில நாட்களில் வெளிவரவுள்ளன.
