2025 டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி 37.3% ஆண்டு வளர்ச்சியுடன் 1,78,646 யூனிட்களை விற்றுள்ளது. 2025 முழு ஆண்டில் 23.51 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

2025 டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி உள்நாட்டு சந்தையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது. அந்த மாத நிறுவனம் 1,78,646 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, 2024 நவம்பரில் விற்கப்பட்ட 1,30,117 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 37.3% ஆண்டு வளர்ச்சியை கண்டுள்ளது. இதன் மூலம் விற்பனை எண்ணிக்கையில் 48,529 யூனிட்கள் கூடுதல் உள்ளது. மேலும், 2025 நவம்பரில் விற்கப்பட்ட 1,70,971 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், மாதந்தோறும் 4.49% வளர்ச்சி கிடைத்துள்ளது; அதாவது ஒரே மாதத்தில் 7,675 யூனிட்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

பிரிவு வாரியான புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ அடங்கிய மினி பிரிவு கனிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு 7,418 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், தற்போது இது 14,225 யூனிட்களாக கிட்டத்தட்ட இரட்டிப்பு அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும், 4 மீட்டருக்கும் காம்பாக்ட் கார் பிரிவு (பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்ஆர் உள்ளிட்டவை) கடந்த ஆண்டு 54,906 யூனிட்களில் இந்த முறை 78,704 யூனிட்களாக உயர்ந்து சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பயன்பாட்டு வாகன பிரிவிலும் மாருதி சுசுகி உறுதியான முன்னேற்றத்தை காட்டியுள்ளது. பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ் மற்றும் எக்ஸ்எல்6 போன்ற மாடல்கள் அடங்கிய இந்தப் பிரிவில், விற்பனை 55,651 யூனிட்களில் 73,818 யூனிட்களாக உயர்ந்துள்ளது. வேன் பிரிவில் (ஈக்கோ) விற்பனை 11,678-லிருந்து 11,899 யூனிட்களாக சிறிய உயர்வை கண்டுள்ளது. மொத்தமாக, பயணிகள் வாகன விற்பனை 1,78,646 யூனிட்கள் என்றும், வர்த்தக வாகன விற்பனை (சூப்பர் கேரி) 3,519 யூனிட்கள் என்றும் பதிவாகியுள்ளது.

முழு 2025 ஆண்டைப் பொறுத்தவரை, மாருதி சுசுகி 23,51,139 யூனிட்கள் உள்நாட்டு விற்பனையைப் பதிவு செய்து, இதுவரை இல்லாத அதிகபட்ச ஆண்டு சாதனையை உருவாக்கியுள்ளது. இதில் உள்நாட்டு சந்தை 19,55,491 யூனிட்களையும், ஏற்றுமதி சந்தை 3,95,648 யூனிட்களையும் கொண்டுள்ளது. 2025-ல் உலக சந்தைகளுக்கு 3.95 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்ததன் மூலம், மாருதி சுசுகி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியாவின் நம்பர் ஒன் பயணிகள் வாகன ஏற்றுமதியாளராக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.