கார் வாங்க நினைத்தவர்களுக்கு பெரிய ஆப்பு.. புத்தாண்டு தொடக்கமே கார் விலை எகிறிப்போச்சு
2026 புத்தாண்டு முதல், பிஎம்டபுள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், எம்ஜி, நிசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை 3% வரை உயர்த்தியுள்ளன. இதனால், புதிய கார் வாங்குவோரின் செலவு கணிசமாக அதிகரிக்கும்.

கார் விலை உயர்வு
2026 புத்தாண்டு தொடக்கத்திலேயே கார் வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்களின் செலவு அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்று முதல் பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன. கடந்த ஆண்டு ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக கிடைத்த விலைச் சலுகை, இந்த உயர்வால் ஒரு அளவு குறையப் போகிறது. புதிய விலைகள் அனைத்தும் 2026 ஜனவரி 1 முதல் அமலில் வந்துள்ளன.
ஜனவரி 1 விலை மாற்றம்
பிஎம்டபுள்யூ (BMW) கடந்த செப்டம்பரில் ஏற்கனவே விலையை உயர்த்திய நிலையில், 2026 தொடக்கத்தில் மீண்டும் 3 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. மூலப்பொருட்கள், லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு காரணமாக செலாவணிச் செலவுகள் அதிகரித்ததே இதற்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உயர்வு CKD மற்றும் CBU மாடல்களுக்கு பொருந்தும். 3 சீரீஸ் மாடலின் விலை சுமார் ரூ.1.8 லட்சம் வரை அதிகரிக்கும்.
வாகன விலை உயர்வு
மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) தனது அனைத்து மாடல்களுக்கும் 2 சதவீதம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை உயர்ந்துள்ளது. உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் யூரோ–ரூபாய் மாற்று விகிதத்தின் பாதிப்பு இதன் பின்னணியில் உள்ளது. இதேபோல், BYD தனது சீலியன் 7 மாதலின் விலையை உயர்த்தியுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜி கார் விலை
எம்ஜி மோட்டார் (MG Motor) 2 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் மாடல்கள் அனைத்திலும் இந்த மாற்றம் பொருந்தும். வின்ட்சர் இவி விலை ரூ.30,000–ரூ.37,000 வரை உயரக்கூடும்; காமெட் இவி விலை ரூ.10,000–ரூ.20,000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நிசான் கார் விலை
மேலும், நிசான் (Nissan) 3 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. நிசான் மேக்னைட் மாடலில் ஜனவரி முதல் ரூ.17,000–ரூ.32,000 வரை உயர்வு இருக்கலாம். ஹோண்டா மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்களும் விலையை மாற்றியமைத்துள்ளன. ரெனால்ட் மாடல்களான க்விட், டிரைபர், கைகர் ஆகியவற்றில் 2 சதவீதம் வரை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2026-ல் கார் வாங்கும் முடிவு இன்று கவனத்துடன் எடுக்க வேண்டியதாக மாறியுள்ளது.

