புத்தாண்டு தொடக்கமே அதிர்ச்சி… எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!
புதிய ஆண்டின் முதல் நாளே பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பணவீக்கம் அதிர்ச்சியாக மாறியுள்ளது. கமெர்ஷியல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
புதிய முதல் நாளே பொதுமக்களுக்கு விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமையல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு, பணவீக்கம் மீண்டும் தலைதூக்குவதை உணர்த்துகிறது. பைப் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு (PNG) விலையை அரசு குறைத்திருந்தாலும், அதே நேரத்தில் கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
கமெர்ஷியல் சிலிண்டர் விலை
இந்த முறை கமர்ஷியல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் 2023க்கு பிறகு இதுதான் மிகப்பெரிய உயர்வாகக் கருதப்படுகிறது. நாட்டின் நான்கு மெட்ரோ நகரங்களில் மூன்றில் ரூ.111 உயர்வும், ஒரு நகரத்தில் ரூ.110 உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டெல்லியில் கமெர்ஷியல் சிலிண்டர் விலை சுமார் ரூ.1,700-ஐ எட்டியுள்ளது. இது ஜூன் 2025க்கு பிறகு உச்ச விலையாகும்.
இன்றைய எல்பிஜி விலை
எண்ணெய் நிறுவன தரவுகளின்படி, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் கமெர்ஷியல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.111 உயர்ந்த முறையே ரூ.1,691.50, ரூ.1,795 மற்றும் ரூ.1,642.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் ரூ.110 உயர்வுடன் விலை ரூ.1,849.50 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் சராசரியாக கமெர்ஷியல் சிலிண்டர் விலை ரூ.1,850-க்கு அருகில் சென்றுள்ளது.
சமையல் எரிவாயு விலை
மற்றொரு புறம், வீட்டு உபயோகத்திற்கான (டொமேஸ்டிக்) எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டெல்லியில் ரூ.853, கொல்கத்தாவில் ரூ.879, மும்பையில் ரூ.852.50 மற்றும் சென்னையில் ரூ.868.50 என்ற விலை தொடர்கிறது. டொமேஸ்டிக் சிலிண்டர் விலையில் கடைசியாக மாற்றம் செய்யப்பட்டதாவது ஏப்ரல் 2025-ல் ஆகும்.
விலை உயர்வு அதிர்ச்சி
அதற்கு முன், கடந்த ஆண்டு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. அதே சமயம், 2024 மார்ச் மாத மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, அரசு டொமேஸ்டிக் எல்பிஜி விலை ரூ.100 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்வு, ஹோட்டல்கள், சிறு வணிகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களின் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

