- Home
- Business
- அடுத்த தங்கம் இதுதான்.. ஒரே ஆண்டில் 40% விலை உயர்வு.. விண்ணை முட்டும் விலை.. எது தெரியுமா?
அடுத்த தங்கம் இதுதான்.. ஒரே ஆண்டில் 40% விலை உயர்வு.. விண்ணை முட்டும் விலை.. எது தெரியுமா?
செயற்கை நுண்ணறிவு, பசுமை பொருளாதாரம் போன்றவற்றால் தேவை அதிகரித்து, விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இதன் விலை உலக சந்தையில் கடுமையாக உயர்ந்து வருகிறது.

அடுத்த தங்கம் எது தெரியுமா?
தங்கம், வெள்ளிக்கு அடுத்ததாக முதலீட்டாளர்களின் கவனத்தை இப்போது ஈர்க்கும் உலோகமாக தாமிரம் (செம்பு) மாறி வருகிறது. சமீப காலமாக தாமிரத்தின் விலை உலக சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இதை பல முதலீட்டாளர்கள் “அடுத்த தங்கம்” என வர்ணிக்க தொடங்கியுள்ளனர். லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் கடந்த வாரம் தாமிரத்தின் விலை ஒரு டன்னுக்கு சுமார் 13,000 அமெரிக்க டாலரை எட்டியது. 2026 ஆம் ஆண்டு விநியோகப் பற்றாக்குறையும், தேவை அதிகரிப்பும் தொடரும் என்பதால், தாமிரத்தின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (AI), எலக்ட்ரிக் வாகனங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் பசுமை பொருளாதாரம் போன்ற துறைகளில் தாமிரத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், மின்சாரம், கட்டுமானம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளிலும் இந்த சிவப்பு உலோகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் விளைவாக, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாமிரத்தின் விலை உயர்வை நோக்கி செல்கிறது. இந்த ஆண்டு மட்டும் தாமிரத்தின் விலை 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
தாமிரம் விலை உயர்வு
அமெரிக்காவுக்கான தாமிர ஏற்றுமதியும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் எதிர்காலத்தில் விதிக்கக்கூடிய வரிகளைத் தவிர்க்கும் நோக்கில், அதிக அளவில் தாமிரம் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இதனுடன், டாலரின் பலவீனமும் தாமிரத்தின் விலையை மேலும் உயர்த்தியுள்ளது. வலுவான தேவை மற்றும் சமீபத்திய விநியோகத் தடைகள் காரணமாக, 2025 டிசம்பர் காலாண்டில் தாமிரத்தின் விலை சாதனை உச்சத்தை எட்டியதாக பொருளாதார நிபுணர்கள் பதிவு செய்தனர்.
தாமிர விநியோகக் குறைவிற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தோனேசியாவில் உள்ள உலகின் முக்கிய தாமிரச் சுரங்கங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, சிலி மற்றும் பெருவில் ஏற்பட்ட தொழிலாளர் பிரச்சினைகள் ஆகியவை உற்பத்தியை பாதித்துள்ளன. இதனால், சந்தையில் தாமிரம் குறைவாகக் கிடைக்கிறது. நிபுணர்களின் கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தாமிரத்தின் விலை ஒரு டன்னுக்கு 12,500 டாலரை எட்டக்கூடும். இந்த சூழலில், தாமிரம் முதலீட்டாளர்களுக்கு முக்கிய வாய்ப்பாக மாறி வருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

