ஜனவரி 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. உங்கள் பணம், சம்பளம், யுபிஐ எல்லாம் மாறும்!
2026 ஜனவரி 1 முதல், பிஎம் கிசான் திட்டத்தில் கிசான் ஐடி, 8வது ஊதியக்குழு அமல், மற்றும் ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு போன்ற முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இவை பொதுமக்களின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜனவரி 1 விதி மாற்றங்கள்
2025 ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடையும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரவுள்ள புதிய நிதி மற்றும் நிர்வாக விதிகள் பொதுமக்களின் தினசரி வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜனவரி 1, 2026 முதல் அமலாகும் இந்த மாற்றங்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், வரிவிதிப்பாளர்கள் மற்றும் குடும்பச் செலவுகள் ஆகிய அனைத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளன.
பிஎம் கிசான் திட்டம்
முதலில், பிஎம் கிசான் திட்டம் தொடர்பான முக்கிய மாற்றம் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற, இனி ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட “கிசான் ஐடி” கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் சரியாக அடையாளம் காணப்படுவதுடன், போலி பயனாளர்களை நீக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
8வது ஊதியக்குழு
மேலும், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 8வது ஊதியக்குழு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியம் குறிப்பிடத்தக்க அளவில் உயர வாய்ப்பு உள்ளது. நிலுவை தொகைகள் பின்னர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
யுபிஐ மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை
யுபிஐ மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை விதிகளிலும் மாற்றம் வருகிறது. சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மொபைல் சிம் சரிபார்ப்பு உள்ளிட்ட பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்படுகின்றன. இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேலும் பாதுகாப்பாக மாறும்.
ஆதார் பான் இணைப்பு
ஆதார்–பான் இணைப்பு தொடர்பாக முக்கிய எச்சரிக்கை உள்ளது. டிசம்பர் 31, 2025க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால், ஜனவரி 1, 2026 முதல் பான் செயலிழக்கும். இது வங்கி பரிவர்த்தனை மற்றும் வரி தாக்கல் போன்றவற்றில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
கிசான் ஐடி
விவசாயிகளுக்கான புதிய இணக்கம் விதிகளும் அமலுக்கு வருகின்றன. குறிப்பாக பிஎம் கிசான் உதவித் தொகை பெற கிசான் ஐடி என்றால் பணம் கிடைக்காது. அதே நேரத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஒரு நல்ல மாற்றமாக, காட்டு விலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் 72 மணி நேரத்துக்குள் புகார் அளிக்க வேண்டும்.
புதிய ஐடிஆர் படிவம்
வரிவிதிப்பாளர்களுக்கு, புதிய ஐடிஆர் படிவம் ஜனவரியில் அறிமுகமாகிறது. இது வங்கி பரிவர்த்தனை விவரங்களுடன் முன்பே நிரப்பப்பட்டதாக இருக்கும். இதனால் தாக்கல் செய்வது எளிதாகும். அதே நேரத்தில் கண்காணிப்பும் அதிகரிக்கும்.
எல்பிஜி விலை உயர்வு
குடும்ப செலவுகள் மீதும் இந்த மாற்றங்கள் தாக்கம் செலுத்தலாம். LPG, PNG, CNG மற்றும் ATF எரிபொருள் விலைகள் ஜனவரி 1ல் மறுபரிசீலனை செய்யப்படும். ATF விலை உயர்ந்தால் விமான கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது. மேலும், சில கார் நிறுவனங்கள் வாகன விலை உயர்வையும் அறிவிக்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

