சீன வாகன உற்பத்தியாளரான கீலி, புதிய பிளக்-இன் ஹைப்ரிட் SUV காலக்ஸி M9 PHEV மாடலுக்கு 40,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.
சீன வாகன உற்பத்தியாளரான கீலி (Geely), தனது புதிய பிளக்-இன் ஹைப்ரிட் SUV மாடல் காலக்ஸி M9 PHEV-க்கு வெறும் 24 மணி நேரத்திலேயே 40,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கீலியின் குடும்ப வாகன வரிசையில் மிகப்பெரிய மாடலாக அறிமுகமாகிறது.
இந்த SUV ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை 193,800 யுவான் (ரூ.22.08 லட்சம்) முதல் 258,800 யுவான் (ரூ.29.50 லட்சம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 சீட்டர் அமைப்புடன் வருவதால், நீண்ட தூர பயணத்திற்கும், குடும்பப் பயன்பாட்டிற்கும் மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.
காலக்ஸி M9, முதலில் 2024-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட காலக்ஸி ஸ்டார்ஷிப் கான்செப்ட் அடிப்படையில் உள்ளது. முன்புறத்தில் ‘பிரில்லியன்ட் காலக்ஸி’ LED லைட் பார், அதிநவீன ஹெட்லெம்ப் வடிவமைப்பு போன்ற அம்சங்கள் கான்செப்ட்டிலிருந்து பெறப்பட்டவை. மேலும், ஓட்டுநரின் பாதுகாப்பிற்காக லிடார் சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது.
இது கீலியின் EM-P ஹைப்ரிட் 2.0 பவர்டிரெய்ன் சிஸ்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 120 kW சக்தி கொண்ட 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின், மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 649 kW (870 hp) பவர் மற்றும் 1,165 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. ஆல்-வீல்-டிரைவ் மாடல், 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டக்கூடிய திறன் கொண்டது.
அளவுகளைப் பொறுத்தவரை, M9 5,205 மிமீ நீளம், 1,999 மிமீ அகலம், 1,800 மிமீ உயரம் மற்றும் 3,030 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. இது மெர்சிடிஸ்-பென்ஸ் GLC-யை விட மிகச்சிறிது மட்டுமே குறைவு.
உட்புற அம்சங்களில், 2+2+2 அமைப்பில் மூன்று வரிசைகள் உள்ளன. பவர்-அட்ஜஸ்டபிள் சீட்கள் காற்றோட்டம் மற்றும் மசாஜ் வசதிகளுடன் வருகின்றன. பின்புற பயணிகளுக்காக 17.3 இன்ச் 3K டிஸ்ப்ளே, மடிக்கக்கூடிய மேசை, 9.1 லிட்டர் குளிர்சாதன பெட்டி போன்ற ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
லக்கேஜ் இடம் 328 லிட்டராக இருந்து, பின்புற இருக்கைகள் மடிக்கப்படும் போது 2,171 லிட்டராக உயரும். இசை அனுபவத்திற்காக 27 ஸ்பீக்கர் கொண்ட ஃபிளைம் ஆடியோ சிஸ்டம், முன்புறத்தில் ஓட்டுநர் மற்றும் பயணிக்கு 12.66 இன் டிஜிட்டல் கிளஸ்டர், HUD மற்றும் இரண்டு 30 இன்ச் டச் ஸ்கிரீன் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.


