மாருதி சுசுகி நிறுவனம் தனது பட்ஜெட் கார்களுக்கு வழங்கிய ஜிஎஸ்டி வரிச் சலுகை முடிவுக்கு வருவதால், கார்களின் விலையை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் விலை உயர்வை பரிசீலிக்கும் அதே வேளையில், நிறுவனம் ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது.
பட்ஜெட் கார்களின் விலை ஏறப்போகுது:
சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தின் மிகப்பெரிய கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் முதலில் தேர்ந்தெடுப்பது மாருதி சுசுகி நிறுவனத்தின் பட்ஜெட் கார்களைத்தான். ஆனால், இப்போது அந்த கனவின் விலை சற்று அதிகரிக்கப்போகிறது என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இந்த திடீர் விலை உயர்வு?
கடந்த ஆண்டு, விற்பனையை அதிகரிக்கவும் நடுத்தர மக்களைக் கவரவும் மாருதி சுசுகி நிறுவனம் தனது சிறிய ரக கார்களுக்குசிறப்பு விலைச் சலுகைகளை வழங்கியது. குறிப்பாக, ஜிஎஸ்டி (GST) வரிச் சலுகையின் பலனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, சுமார் 8.5% வரை விலையைக் குறைத்திருந்தது. தற்போது அந்த சலுகைக் காலம் முடிவுக்கு வருவதால், நிறுவனம் மீண்டும் பழைய விலைக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளது. இது குறித்துப் பேசிய மாருதி சுசுகி இந்தியாவின் மூத்த அதிகாரி பார்த்தோ பானர்ஜி, "நாங்கள் மீண்டும் பழைய ஜிஎஸ்டி விலைக்குத் திரும்புவதா அல்லது தற்போதைய விலையிலேயே தொடர்வதா என்பது குறித்து மிக விரைவில் ஒரு முடிவை எடுக்கவுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்குப் பாதிப்பா?
புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள் ஒருபுறம் கவலையில் இருக்க, ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டு காருக்காகக் காத்திருப்பவர்களுக்கும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. நீண்ட காத்திருப்பு: தற்போது மாருதி கார்களுக்கு இருக்கும் மல்லுக்கட்டலால், ஒரு காரைப் பெற 1.5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
விலை உயர்வு யாருக்கு?
டிசம்பர் 31-க்குள் முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையில் கார் கிடைக்குமா? அல்லது டெலிவரி எடுக்கும்போது இருக்கும் புதிய விலையைச் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து நிறுவனம் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்றுமதியில் சாதனை - உள்நாட்டில் விலையேற்றம்?
இந்தியாவில் விலை உயர்வு குறித்த பேச்சுக்கள் ஒருபுறம் இருக்க, மாருதி நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் 3.95 லட்சம் வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்தியாவின் நம்பர் 1 ஏற்றுமதியாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளது. 2024-ஐ விட இது 21% வளர்ச்சியாகும். சர்வதேச சந்தையில் இவ்வளவு பெரிய லாபத்தைச் சம்பாதிக்கும் நிறுவனம், உள்நாட்டு நடுத்தர மக்களுக்கு விலை உயர்வு என்ற அதிர்ச்சியைத் தருமா என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினர் கவனத்திற்கு
நீங்கள் ஆல்டோ (Alto), வேகன் ஆர் (Wagon R) அல்லது ஸ்விஃப்ட் (Swift) போன்ற பட்ஜெட் கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தால், விலை உயர்வு அறிவிப்பு வரும் முன்பே உங்கள் டீலரை அணுகுவது புத்திசாலித்தனம். சலுகை விலையில் கார் கிடைக்கும் கடைசி வாய்ப்பு இதுவாகவும் இருக்கலாம்.
மாருதி சுசுகியின் இந்த 'விலை உயர்வு' முடிவு நடுத்தர மக்களின் பட்ஜெட்டை நிச்சயம் பாதிக்கும். நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி சலுகைகளை நீட்டிக்குமா அல்லது விலையை உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


