Apr 1, 2024, 7:29 PM IST
மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா கூட்டணியின் கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஜோதிமணி தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிகழ்வின்போது, கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் கீழே விழுந்து கிடந்தது.
ஆனால் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும், அங்கிருந்த வயதான முதியவர் அதை எடுத்துச் சென்று ஊன்றி வைத்தார் என்றும் கூறப்படுகிறது, இதுதான் இவர்கள் கூட்டணி கட்சிக்கு கொடுக்கும் மரியாதையா என்று பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் தொண்டர் ஒருவர் அதிகாலையிலேயே அளவுக்கு அதிகமான மதுவை குடித்துவிட்டு, அவ்வழியே செல்லும் வாகனத்தை மறித்து, இந்த வழியாக வாகனம் செல்லக்கூடாது என்றும் அட்ராசிட்டி செய்துள்ளார்.
அதன் பிறகு ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது பாஜக வேட்பாளர், ஜோதிமணி தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்தார் என்று நிரூபிப்பவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ரூபாய் நோட்டை காட்டி பேசியதைப் பற்றி ஜோதிமணியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜோதிமணி, பாரதிய ஜனதா கட்சியிடம் இந்த நாட்டு மக்களிடம் கொள்ளை அடித்த பணம் குவிந்து கிடக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழல் செய்த பணம் நரேந்திர மோடி இடம் மட்டுமில்லாமல் அண்ணாமலை, செந்தில் பாலாஜி என்று சொல்ல வந்துவிட்டு, பின் சுதாரித்துக் கொண்டு செந்தில்நாதன் வரை செல்கின்றது என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிஜேபி ஆட்சியில் நாட்டு மக்களிடம் ஒரு 500 ரூபாய்க்கு கூட இல்லை, ஆனால் பாஜக வேட்பாளர் 50ஆயிரம் ரூபாய் வைத்து ஆட்டியது அனைத்துமே ஊழல் பணம் தான் என்று பேசினார்.