Feb 12, 2024, 12:43 PM IST
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லரைபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காதர்பாஷா. இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தார். கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திடீரென கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டு மலமலவென தீப்பற்றி எரிந்துள்ளது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் 45 நிமிடம் கழித்தே தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், விவசாய நிலத்திற்கு வந்த 5 நிமிடங்களில் தண்ணீர் காலியான நிலையில் தீயை அணைக்க இயலாமல் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்காமல் திரும்பி சென்றதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மொத்த கரும்பும் தீயில் கருகியதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயி காதர் பாஷா தனது குடும்பத்துடன் கொழுந்து விட்டு எரியும் கரும்பு தோட்டத்தில் தீயை அணைக்க கடும் முயற்சி செய்தும் பலனளிக்காமல் போகவே தீயை அணைக்க முடிய வில்லையே என அவர் கதறி அழும் காட்சிகள் மனதை உருக்குவதாக இருந்தது.
கரும்பு பயிர் முழுவதுமாக விளைந்து கரும்பு ஆலைக்கு கட்டிங் செய்து கொண்டு செல்ல கடந்த 20 நாட்களாக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கரும்பு நாசமானது விவசாயியையும், அவர் குடுபத்தையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.