சாலைகளில் எமனாக வலம் வரும் அரசுப் பேருந்துகள்; தற்காலிக பணியாளர்களால் மக்கள் பீதி - வேலூரில் 20 பேர் காயம்

Jan 10, 2024, 7:29 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை ஏரிக்கரை ஓரம் பேரணாம்பட்டில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. பேருந்து தற்காலிக ஓட்டுநரால் இயக்கப்பட்ட நிலையில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்து விபத்துக்குள்ளான நிலையில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மற்றும் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் சம்பவத்திற்கு சென்று பார்வையிட்டனர். தற்காலிக ஓட்டுநரை வைத்து அரசு பேருந்து இயக்கப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.