
கடலூர் மாவட்டம் வெள்ளி கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மணல் சிற்பம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி கடலூர் வெள்ளி கடற்கரையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த மணல் சிற்பத்தினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அருண் தம்பராஜ் பார்வையிட்டார். அப்போது வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதி மொழியை கல்லூரி மாணவர்கள் ஏற்றனர், அவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் வெள்ளி கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.