Apr 10, 2023, 10:55 AM IST
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் அருகே உள்ள கருப்புக் கிழார் கீழத்தெரு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள கிராம உட்புற சாலையை கடந்து செல்லும் மின்சார கம்பி மிகவும் தாழ்வாக செல்வதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அறுவடை இயந்திரம் நெல் மூட்டைகள் ஏற்றி செல்லும் டிராக்டர் உள்ளிட்டவை செல்ல முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் பகுதியில் இந்தியாவின் தேசிய பறவையான மயில்கள் நிறைந்து காணப்படுகின்றது.இங்கு உள்ள வீடுகளில் உள்ள தோட்டத்திற்கு மயில்கள் வருவதும் அதற்கு இப்பகுதி மக்கள் இறையிடுவதும் வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் குழந்தை வேலு என்பவர் வீட்டின் எதிரில் பறந்து வந்த ஆண்மையில் ஒன்று தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உயிரிழந்த மயிலை மீட்டு மன்னார்குடி வனத்துறையினருக்கும் கோட்டூர் காவல்துறையினருக்கும் இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தனர். தாழ்வாக செல்லும் மின் கம்பியால் தான் மயில் உயிரிழந்ததாகவும் இதுகுறித்து பலமுறை கோட்டூர் மின்சார வாரியத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.