யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்டர்19 (யு19) ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மூலமாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1989ஆம் ஆண்டு முதல் முறையாக யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
WPL 2024 Auction: நாளை மும்பையில் நடக்கும் மகளிர் பிரீமியர் லீக் ஏலம்!
கடைசியாக 9ஆவது எடிஷன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடந்தது. இதில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதுவரையில் 9 எடிஷன் நடந்துள்ளது. இதில் இந்தியா 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரேயொரு முறை ஆப்கானிஸ்தான் பட்டம் வென்றது. இந்த நிலையில், 10ஆவது யு19 ஆசிய கோப்பை தொடரானது இன்று துபாயில் தொடங்கியது. இதில், 8 அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று 4 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.
இதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதும். கடைசியாக 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த தொடரில், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் குரூப் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஜப்பான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
குரூ ஏ பிரிவில் இடம் பெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி துபாயில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில், ராஜ் லிம்பானி மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். நமன் திவாரி 2 விக்கெட்டும், முருகன் அபிஷேக் மற்றும் முஷீர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய யு19 இந்திய அணிக்கு அர்ஷின் குல்கர்னி நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர், 105 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு பக்க பலமாக முஷீர் கான் விளையாடினார். முஷீர் கான், 53 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 48 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக யு19 இந்திய அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இப்போ ஃபீல் பண்ணுறேன்; இந்திய ரசிகர்களை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது – ஹாரி ப்ரூக்!
இந்த வெற்றியின் மூலமாக இந்த தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இன்று நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் யு19 அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை 9 ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வங்கதேச யு19 அணி ஒரு போட்டியிலும், 4ஆவது போட்டியில் ஜப்பான் மற்றும் இலங்கை அணிகளும் மோதுகின்றன.