வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பந்தை கையால் தடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பவுலிங்கில் தரப்பில் நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளும், மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். அஜாஸ் படேல் 2 விக்கெட்டும், டிம் சவுதி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி ஆடியது. இதில், டாம் லாதம் 4 ரன்னும், டெவான் கான்வே 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன் 13 ரன்னிலும், ஹென்ரி நிக்கோல்ஸ் ஒரு ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டெல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் முறையில் நடையை கட்டினார். இதையடுத்து டேரில் மிட்செல் 12 ரன்னுடனும், கிளென் பிலிப்ஸ் 5 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதையடுத்து 2ஆம் நாள் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3ஆவது நாளான இன்று நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் வங்கதேச அணியில் தைஜூல் இஸ்லாம் மற்றும் மெஹிடி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இப்போ ஃபீல் பண்ணுறேன்; இந்திய ரசிகர்களை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது – ஹாரி ப்ரூக்!
பின்னர் 8 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணியில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 15 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணியானது 2 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.