Hajj pilgrimage visa
ஹஜ் யாத்திரை:
ஹஜ் யாத்திரை நெருங்கி வருவதால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளின் குடிமக்களுக்கு சில விசாக்கள் வழங்குவதை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன்படி, ஹஜ் யாத்திரை முடிவடையும் ஜூன் மாத நடுப்பகுதி வரை உம்ரா, வணிகம் மற்றும் குடும்ப வருகைக்கான விசாக்களுக்கு தடை அமலில் இருக்கும்.
இந்தத் தடை அறிவிப்பு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வருபவர்களுக்குப் பொருந்தும். ஹஜ் 2025 சீசன் ஜூன் 4-9 வரை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
Hajj pilgrimage history
அதிகாரபூர்வமற்ற நுழைவு:
முறையான பதிவு இல்லாமல் தனிநபர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், உம்ரா விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் ஏப்ரல் 13 வரை சவுதி அரேபியாவிற்குள் நுழையலாம் என்று சவுதி அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் பல வெளிநாட்டினர் உம்ரா அல்லது சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து, பின்னர் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக அதிக நாட்கள் தங்கி, ஹஜ்ஜில் பங்கேற்றுள்ளனர். அதிகமான கூட்ட நெரிசலும் கடுமையான வெப்பமும் பல்வேறு சிரமங்களுக்கு வழிவகுத்தன. இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக விசா கட்டுப்பாடு அவசியமானதுதான் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது இதுபோன்ற ஒரு சம்பவத்தில், குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
Hajj pilgrimage Restrictions
ஹஜ் ஒதுக்கீட்டு முறை:
ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்க சவுதி அரேபியா ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுகிறது. இதன்படி யாத்ரீகர்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்த ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இடம் ஒதுக்கப்படுகிறது. ஹஜ்ஜில் சட்டவிரோதமாகப் பங்கேற்கும் மக்கள் இந்த முறையைத் தவிர்க்கிறார்கள்.
இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணம் சட்டவிரோத வேலைவாய்ப்பு. வணிக அல்லது குடும்ப விசாக்களைப் பயன்படுத்தி வெளிநாட்டினர் சவுதி அரேபியாவில் அங்கீகரிக்கப்படாத வேலையில் சேர்கின்றனர். இதன் மூலம் விசா விதிகளை மீறி, தொழிலாளர் சந்தை சீர்குலைவுகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Hajj pilgrimage
அமைச்சகத்தின் விளக்கம்:
இந்த நடவடிக்கைக்கும் இராஜதந்திர கவலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை; இது புனித யாத்திரையை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாக மட்டுமே என்று சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய விதிகளை மீறுபவர்கள் எதிர்காலத்தில் ஐந்து ஆண்டுகள் ஹஜ் பயணத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படுவார்கள். எனவே பயணிகள் புதிய விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தூதரக விசாக்கள், வசிப்பிட அனுமதி, ஹஜ்ஜுக்கான விசாக்கள் புதிய விதிமுறைகளால் பாதிக்கப்படவில்லை.