
மைசூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் மகனுக்குச் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். தம்பதியின் ஏழு வயது இளைய மகன் சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மைசூரின் விஜயநகர் மூன்றாம் கட்டத்தில் உள்ள 'ஹோலோ வேர்ல்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷவர்தன் (57) என்றும் அழைக்கப்படும் ஹர்ஷ கிக்கேரி, வியாழக்கிழமை இரவு (அமெரிக்க நேரம்) இந்த துயரச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார். தனது மனைவி ஷ்வேதா மற்றும் அவர்களது ஒரு மகனைச் சுட்டுக் கொன்றார். பின்னர் தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிங் கவுண்டி ஷெரிப் அலுவலகம் (KCSO) அளிக்கும் தகவலின்படி, இந்தச் சம்பவம் வாஷிங்டனின் நியூகேஸில்லில் உள்ள ஒரு டவுன்ஹவுஸில் நடந்தது. 911 அவசர உதவி எண்ணுக்கு வந்த தகவலைத் தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு முதலில் வந்தவர்கள் வீட்டிற்குள் மூன்று பேர் இறந்து கிடப்பதைக் கண்டனர்.
அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று போலீசார் உறுதிப்படுத்தினர். இறப்பிற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. போலீசார் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் வெளியிடவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
வெற்றிகரமான தொழிலதிபர்:
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கிக்கேரி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷா, மைசூரில் உள்ள ஸ்ரீ ஜெயசாமராஜேந்திர பொறியியல் கல்லூரியில் (SJCE) பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் அவர் அமெரிக்காவில் மைக்ரோசாஃப்டில் பல ஆண்டுகள் பணியாற்றினார். ரோபோக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
2017 இல் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, ஹர்ஷா மற்றும் அவரது மனைவி ஷ்வேதா இருவரும் மைசூரில் 'ஹோலோ வேர்ல்ட்' என்ற ரோபாட்டிக்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினர். 2018 இல், நிறுவனம் 'ஹோலோசூட்' ஐ உருவாக்கியது, இது உலகின் முதல் மலிவு விலை இலகு ரக இருவழி வயர்லெஸ் முழு உடல் மோஷன் கேப்சர் சூட் ஆகும். இது விளையாட்டு, சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றிற்குப் பயன்படக்கூடியது.
ஷ்வேதா இந்த நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார், ஹர்ஷா தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். நிறுவனத்தின் தயாரிப்புகள் சர்வதேச அளவில் விற்பனையாகின. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஹோலோ வேர்ல்டின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார்.
பிரதமரைச் சந்தித்த ஹர்ஷா:
எல்லைப் பகுதிகளில் ரோபோக்களைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க ஹர்ஷா பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார், 24 மணிநேரமும் அனைத்து விதமான தீவிரமான வானிலையிலும் செயல்படக்கூடிய ராணுவ வீரர்கள் போல ரோபோக்களைப் பயன்படுத்துவது பற்றி ஆலோசித்தார்.
ஹர்ஷா மைசூரில் நடந்த தொழில்முனைவோர் மாநாடுகளில் ரோபாட்டிக்ஸ் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஹர்ஷா தனது தொழில் பயணத்தில் வெற்றிகரமாக முன்னேறினார். ஆனால், திடீரென இந்த பயங்கரச் செயலில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணைக்குப் பின்பே தெரியவரும்.