
நடைபயிற்சி மிதமான உடற்பயிற்சி. எந்த உபகரணங்களையும் பயன்படுத்தாமல் ஒட்டுமொத்த உடலுக்கும் பயிற்சி அளிக்க நீங்கள் விரும்பினால் தினமும் நடக்கலாம். நாள்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது கூட போதுமானது. ஆனால் விறுவிறுப்பான நடை தான் உடலை நன்கு இயங்க செய்யும். சுறுசுறுப்பாக நடப்பதால் ஆற்றல் அதிகம் செலவிடப்பட்டு உடல் எடை குறையும். மெதுவாக நடந்தால் பயனில்லை என்றில்லை. அதற்கேற்றவாறு பலன் கிடைக்கும். ஆனால் உடலுக்கு 9 வகையான நன்மைகளை பெற எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. எப்போது நடந்தாலும் நன்மை தான் என்றாலும், சாப்பாட்டுக்கு பின் நடப்பது மிகவும் நல்லது. நீங்கள் சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் முறையே காலை, மாலை, மதியம் என மூன்று நேரங்களிலும் நடந்தால் செரிமானம் மேம்படுகிறது. ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. சாப்பிட்ட பின் நடப்பதால் வயிறு வீக்கம், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. இது தவிர கிடைக்கும் 9 நன்மைகளை இங்கு காணலாம்.
சாப்பாட்டிற்கு பின்னர் மிதமான நடைபயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதுமட்டுமின்றி கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. சிறந்த ரத்தம் ஓட்டம் இருப்பதால் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும். இதய நோயின் ஆபத்து குறைந்துவிடும்.
நல்ல தூக்கம்:
தினமும் சாப்பிட்ட பின் நடைபயிற்சி செய்வது உடலின் உயிரியல் கடிகாரத்தை நன்கு செயல்பட தூண்டுகிறது. இதனால் உங்களுடைய தூக்க சுழற்சி மேம்படும். இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். நல்ல தூக்கமே உடலின் பல நோய்களை விரட்ட உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மூளை நன்கு செயல்பட்டு அறிவாற்றல் மேம்படுகிறது.
நடைபயிற்சி செய்வது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. உடலில் எண்டோர்பின்கள் சுரப்பதால் மனநிலை சீராகி பதற்றம் குறைகிறது. சாப்பிட்ட பின்னர் குறுநடை போடுவது மனச்சோர்வை குறைக்கும்.
ஆற்றல் அளவு உயரும்:
சாப்பிட்ட பின் குறுநடை போடுவது உடல் முழுக்க ரத்தம் ஓட்டம், ஆக்சிஜன் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதனால் புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். உடலின் ஆற்றல் அளவை அதிகரிப்பதால் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட முடியும். படிப்பது, அலுவலக வேலைகளில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும்.
இதையும் படிங்க: நோய்களை நீக்கும் வெறுங்கால் வைத்தியம்.. பலர் அறியாத வாக்கிங் 'டிப்ஸ்'
சாப்பிட்ட பிறகு நடப்பதால் குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் இயங்க சாதகமாக அமையும். நம் உடலில் உள்ள குடல் நுண்ணுயிரிகள் செரிமானம் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி நோயெதிர்ப்பு மண்டலம், மன ஆரோக்கியத்திற்கு தேவையானதாகும். குடல் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஆதரிக்க உணவுக்கு பின்னான நடைபயிற்சி உதவுகிறது.
செரிமானம் மேம்படும்:
நடைபயிற்சி செய்வது செரிமான மண்டலத்தில் உள்ள இரைப்பையை நன்கு இயங்க வைக்கிறது. இரைப்பையில் உணவை சிதைக்கத் தேவையான செரிமான நொதிகளை அதிகம் சுரக்க உதவுகிறது. இதனால் வயிறு உப்புசம், செரிமான கோளாறு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. மலச்சிக்கல் அறவே வராமல் தடுக்கப்படும்..
இதையும் படிங்க: அடேங்கப்பா!! வெறும் 30 நாள்களில் '4' கிலோ வரை எடை குறையுமா? பெஸ்ட் வாக்கிங் டிப்ஸ்!!
சாப்பிட்ட பின் நடப்பதால் உடலில் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கும். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். ஏற்கனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அல்லது நோய் தாக்கும் ஆபத்தில் உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட்டதும் நடக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் நடக்கலாம்.
மூளையின் செயல்திறன் மேம்படும்:
சாப்பிட்டதும் குறுநடை போடுவது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றல் மேம்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். உணவுக்கு பின் குறுநடை போடுவதால் மனத்தெளிவு கிடைக்கும். இதனால் குழப்பங்களை தீர்க்கும் திறன் மேம்படும்.
சாப்பிட்ட பின் நடப்பதால் அதிகமான கலோரிகளை இழக்க முடியும். மூன்று வேளையும் சாப்பிட்ட பின் நடப்பதால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். ஏனெனில் உணவுக்கு பின் நடப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் நீங்கள் உண்ணும் உணவு கொழுப்பாக சேமிப்பது தடுக்கப்படுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைப்பதால் இதய நோய், பக்கவாதம், புற்றுநோய்கள் ஆகியவை தடுக்கப்படுகிறது. உடல் பருமன் காரணமாக ஏற்படும் நோய்களும் தடுக்கப்படுகின்றன.