அம்மாவின் மீது அம்புட்டு பாசம்.. தாய்க்காக தாஜ்மஹாலையே கட்டி வைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் - வியக்கவைக்கும் போட்டோஸ்

First Published Jan 29, 2024, 3:21 PM IST

தாஜ்மஹால் போன்று கட்டப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடைய தாயின் நினைவிடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய இசைமூலம் உலகளவில் பிரபலமானவர். இவர் சினிமாவில் இந்த அளவுக்கு உயரங்களை எட்டியதற்கு அவரது தாயாரும் ஒரு முக்கிய காரணம். இதனால் ஏ.ஆர்.ரகுமான் தன் தாய் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். ஏ.ஆர்.ரகுமானின் தாய் கரீமா பேகம் கடந்த 2022-ம் ஆண்டு மரணமடைந்தார். தன் தாய் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவருக்காக தாஜ்மகால் போன்ற தோற்றம் கொண்ட ஒரு நினைவிடத்தை ரகுமான் கட்டி இருக்கிறார்.

சென்னையில் அமைந்துள்ள இந்த நினைவிடத்துக்கு சமீபத்தில் எழுத்தாளர் நாகூர் ரூமியை அழைத்துச் சென்றுள்ளார் ரகுமான். அங்கு சென்ற அனுபவத்தை நாகூர் ரூமி வியப்புடன் பகிர்ந்துள்ளார். அதைப் பார்க்கலாம், சில மாதங்களுக்கு முன்பு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் துபாயிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு கொடுத்தார். என் வீடியோ ஒன்றைப் பார்த்ததாகவும், அது அவருக்குப் பிடித்திருந்ததால் என்னையும் பார்க்க விரும்புவதாகவும், இன்ஷா அல்லாஹ் சென்னை வந்ததும் தெரிவிப்பதாகவும் சொன்னார். ஆனால் அவர் சொல்லி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. அவர் அவ்வளவு பிசி.

இடையில் அவர் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது மறக்காமல் எனக்கு மூன்று ஸ்பெஷல் முன்வரிசை டிக்கட்டுகளை அனுப்பினார். ஒரு டிக்கட் 30,000 ரூபாயாம். நானும் போய் வந்தேன். அங்கேயும் அவரைத்தனியாகப் பார்த்து பேசமுடியவில்லை. 26ந் தேதி திடீரென்று அவரது மேனேஜர் ஒருவர் என்னை அழைத்தார். ஜனவரி 27-ம் தேதி காலை கார் அனுப்புவதாகவும், ஏ ஆர் வீட்டுக்கு அவர் அழைத்திருப்பதாகவும் சொன்னார். காலை நான்கு மணிக்கு கார் வருமென்று சொன்னார். அதாவது நான் படுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்பு. வேறுவழியின்றி மூன்று மணிக்கே குளித்துவிட்டுத் தயாரானேன். 

மிகச்சரியாக காலை நான்கு மணிக்குக் கார் வேளச்சேரிக்கு (என் மகள் வீட்டுக்கு) வந்துவிட்டது. அதில் ஏறி அவர் வீட்டுக்குப்போனேன். வீட்டில் யாருமே இல்லை! நிசப்தம். ஒரு இடத்தில் என்னை உட்கார வைத்துவிட்டு, ‘சார் வருவார்’ என்று சொல்லிவிட்டு வந்தவர் போய்விட்டார். கொஞ்ச நேரம் ஃபோனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வேறு என்ன செய்ய? ஒரு ஐந்து மணி வாக்கில் ரஹ்மான் வந்தார். வந்தவுடன் சலாம் சொன்னார். பின் தொழப்போகலாமா என்றார். நானும் அவரும் இன்னொரு கேரளாக்காரரும் மாடிக்குச் சென்றோம். 

அங்கே தொழுகைக்காகவே ஓரிடம் ஒதுக்கப் பட்டிருந்தது. அழகான விரிப்பு, ஆந்திராவில் உள்ள ஏதோ தர்காவின் படம், ஒரு முஸ்லிம் ஞானியின் வரைபடம் எல்லாம் இருந்தன. என்னை இமாமத் செய்கிறீர்களா என்று கேட்டார். நான் எப்போதுமே அதைச் செய்வதில்லை. எனவே பணிவாக மறுத்துவிட்டேன். அவரே இமாமத் செய்தார். நானும் அந்த கேரளா நண்பரும் அவர் இமாமத் செய்யத் தொழுதோம். பின்னர் கீழே வந்தோம். அப்போது அங்கே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்தனர். அவர்தான் புகழ்பெற்ற தயாரிப்பாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் என்று எனக்குத் தெரியவில்லை.

இதையும் படியுங்கள்... 12 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்ட பாடல்.. 10 நிமிடத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்.. வைரமுத்து சொன்ன சீக்ரெட்..

பின் நாங்கள் எல்லோரும் ஒரு வேனில் ஏறிக்கொண்டோம். வேன் ரெட்ஹில்ஸுக்கு அருகில் இருந்த ஒரு இடத்துக்குச் சென்றது. அங்கேதான் ரஹ்மானின் அன்பு அன்னையின் அடக்கஸ்தலமிருந்தது. ஆனால் ஏதோ தாஜ் மஹாலுக்கு வந்துவிட்ட மாதிரி இருந்தது. நான் இன்னும் தாஜ் மஹாலைப் பார்க்கவில்லை. அவ்வளவு அழகாக அந்த இடம் இருந்தது. வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே சில படங்கள் அவரோடு எடுத்துக்கொண்டோம். அவர் அம்மாவின் அடக்கஸ்தலத்தை மிகவும் ‘ரிச்’ ஆக வைத்திருந்தார். 

அடக்கஸ்தலத்தின்மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையின் அழகு கண்ணைக்கவர்ந்தது. அதற்கு நேர் எதிரே அம்மாவின் வரைபடம் ஒன்றும் இருந்தது. யாரோ ஒருவர் குர்’ஆன் ஓதிக்கொண்டே இருந்தார். ஒரு யந்திரத்தில், திருமறை ஓதப்படும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க ஏற்பாடு.  
டீ, டிஃபன் எல்லாம் கொடுக்கப்பட்டது. என்னைப்பற்றி உயர்வாக ராஜீவ் மேனனிடம் ரஹ்மான் சொன்னார். என் வீடியோக்கள் பலவற்றை ரஹ்மான் பார்த்திருக்கிறார். அவர் பேச்சில் அது தெரிந்தது. 

சாப்பிடப்போகும்போது ரஹ்மானின் மேனேஜர் ’நீங்க ரஃபி சார்தானே?’ என்றார். ’ஆமாம். நீங்க?’ என்றேன். ‘சார், நான் ஆம்பூரில்தான் படித்தேன். நீங்க என் ப்ரொஃபசர் சார்’ என்றார். இரட்டிப்பு சந்தோஷம். என் மாணவர் என்னை அடையாளம் கண்டு கௌரவப் படுத்துகிறார். அவர் ரஹ்மானிடம் மேனேஜராக இருக்கிறார். யுகபாரதி என் நெருங்கிய நீண்டநாள் நண்பர் என்று ரஹ்மானிடம் சொன்னேன். அவர் பிரம்மாதமாகப் பாடல்கள் எழுதுவதாகச் சொன்னார். எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. 

ஒருநாள் சாப்பிட வீட்டுக்கு வாங்க என்று அழைத்துள்ளேன். வருவதாகவும் சொல்லியுள்ளார். ஆனால் அது எப்போது என்பதை காலம்தான் முடிவு செய்யவேண்டும். ராஜீவ் மேனனைப் பற்றி அவர் கூட இருந்தபோது தெரியவில்லை. 

கடைசியில் தான் சகோதரர் கவிஞர் மஹ்ஷூக் ரஹ்மான் (ஜோதா அக்பர் படத்தில் வரும் க்வாஜா மேரி க்வாஜாவுக்கான தமிழ்ப்பாடலை எழுதியவர்) சொன்னார். அவரும் வந்து இணைந்துகொண்டார். சில ஃபோட்டோக்களை அவர்தான் எனக்காக எடுத்துக்கொடுத்தார். திரும்பி வரும் வழியில் கோயம்பேட்டில் இறங்கிக்கொண்டேன். என் மூத்த மகளைப் பார்ப்பதற்காக. இன்ஷா அல்லாஹ் சந்திப்போம் என்று சொல்லி விடைபெற்றார். இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே போவான். ஏனெனில் கொஞ்சம்கூடப் பெருமை இல்லாத, மிக எளிமையான மனிதராக அவர் இருக்கிறார் என நாகூர் ரூமி உணர்ச்சி பொங்க கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்... AI-ஐ வைத்து லால் சலாமில் இசைப்புயல் நிகழ்த்திய மேஜிக்

click me!