பெண்களுக்கு மோடியின் கேரண்டி! அனைத்து பெண்களுக்கும் வருடம் ரூ.50,000 வழங்கும் சுபத்ரா யோஜனா!

By SG Balan  |  First Published May 16, 2024, 9:39 AM IST

சுபத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வவுச்சரை பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பணமாக மாற்றி, அதை தங்கள் குடும்பத் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.


மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கும் ஒடிசாவில் ‘சுபத்ரா யோஜனா’ திட்டத்தை தொடங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.50,000 பணத்துக்கான வவுச்சர் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

ஒடிசாவில் நடைபெறும் தேர்தலுக்காக பாஜக தனது ‘சங்கல்ப் பத்ரா’ என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக ‘சுபத்ரா யோஜனா’ பற்றிக் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

பெண்களுக்கு நிதியுதவி மூலம் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது என கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வவுச்சரை பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பணமாக மாற்றி, அதை தங்கள் குடும்பத் தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘சுபத்ரா யோஜனா’ மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பா.ஜ.க.வின் மிகவும் வெற்றிகரமான திட்டமாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இத்திட்டம் மூலம் பெண் வாக்காளர்களைக் கவர முடியும் என பாஜக கணக்கு போடுகிறது. ஒடிசாவில் நடக்கும் தேர்தலில் தங்கள் கட்சி ஆளும் பிஜூ ஜனதா தளத்தை முறியடிக்கும் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதுதவிர, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களின் சம்பளம் முறையே ரூ.12,000 மற்றும் ரூ.8,000 ஆக உயர்த்தப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்தது.

2027ஆம் ஆண்டுக்குள் ரூர்கேலா, சம்பல்பூர், பரதீப் மற்றும் தாம்ராவை இணைக்கும் தொழில் வழித்தடத்தை உருவாக்குவோம் என்றும் அதன் மூலம் 2029ஆம் ஆண்டுக்குள் 3.5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். ‘லக்பதி திதி’ திட்டத்தின் கீழ் ஒடிசாவில் 2027ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

குவின்டாலுக்கு 3,100 ரூபாய் விலைக்கு நெல் கொள்முதல் செய்து, பணத்தை 48 மணிநேரத்திற்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் ஒடிசாவில் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பாஜக வாக்குறுதி கொடுத்துள்ளது.

click me!