வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினை மறைமுகமாக எச்சரித்துள்ளார். டிரம்பின் அடுத்தகட்ட நகர்வு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உலக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை முன்வைத்து உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்குத் தெரியும்

மதுரோவின் கைது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெலென்ஸ்கி, "ஒரு சர்வாதிகாரியை (மதுரோ) இப்படி கையாள முடியும் என்றால், அமெரிக்காவிற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்," என்று கூறினார். அவர் புடினின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது பேச்சு ரஷ்ய அதிபரையே குறிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மதுரோவின் கைதைக் கண்டித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. "மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் தலைவரையும் அவரது மனைவியையும் கடத்தியது கண்டிக்கத்தக்கது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்," என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

நரகத்திற்கு நிகரான சிறை?

கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்திற்கு (MDC) மாற்றப்பட உள்ளனர்.

இந்தச் சிறைச்சாலை மிகவும் மோசமான சுகாதாரமற்ற சூழல், கைதிகளுக்கு இடையேயான வன்முறை மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு ஆகியவற்றிற்குப் பெயர் போனது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் 'நார்கோ-டெரரிசம்' (Narco-terrorism) உள்ளிட்ட பிரிவுகளில் மதுரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெனிசுலாவில் கொண்டாட்டம்

மதுரோவின் வீழ்ச்சியை அந்நாட்டு எதிர்க்கட்சியினர் வீதிகளில் இறங்கிக் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவி மரியா மெச்சாடோ மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், மதுரோவின் விசுவாசியான டெல்சி ரோட்ரிக்ஸுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இது வெனிசுலாவின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோ

அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மதுரோ கைவிலங்கிடப்பட்ட நிலையில் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படுகிறார். பல வருடங்களாக அமெரிக்காவிற்குச் சவால் விட்டு வந்த ஒரு தலைவர், இப்போது சாதாரணக் கைதியாக அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.