No Sunrise : இரண்டு மாதங்களுக்கு சூரிய வெளிச்சமே கிடைக்காது.. பூமியில் இப்படியொரு இடமா?
No Sunrise : அமெரிக்காவின் உட்கியாக்விக் நகரில் ஆண்டுதோறும் சுமார் 62 நாட்கள் சூரியன் உதிப்பதில்லை. அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இரண்டு மாதங்களுக்கு சூரிய வெளிச்சமே கிடைக்காது
ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல, தொடர்ந்து 62 நாட்கள் சூரியனையே பார்க்க முடியாது என்றால் நம்ப முடிகிறதா? உலகின் சில பகுதிகளில் இயற்கையின் வியக்கத்தக்க நிகழ்வான துருவ இரவு (Polar Night) காரணமாக பல வாரங்களுக்குச் சூரியன் உதிப்பதே இல்லை. காலையில் விடியலும், மாலையில் சூரிய அஸ்தமனமும் வழக்கமாக நடைபெறும் நமக்கு, இந்த நிகழ்வு ஆச்சரியமாக இருக்கலாம்.
ஆனால் இது வெறும் கற்பனையோ, வதந்தியோ அல்ல. பூமியின் அச்சு சாய்வு மற்றும் அதன் சுற்றுப்பாதை காரணமாக ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள சில பகுதிகளில் ஆண்டுதோறும் இத்தகைய நீண்ட இரவுகள் ஏற்படுகின்றன.
62 நாட்கள் சூரியன் உதிக்காத இடம் எது, இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன, அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
62 நாட்கள் சூரியன் உதிக்காத இடம் எது?
அமெரிக்காவின் அலாஸ்கா (Alaska) மாகாணத்தில் அமைந்துள்ள உட்கியாக்விக் (Utqiagvik) என்ற நகரில் அடுத்த 62 நாளைக்கு சூரிய உதயமே இருக்காதாம்.
நாடு: அமெரிக்கா
மாகாணம்: அலாஸ்கா
பழைய பெயர்: பாரோ (Barrow)
அமைவிடம்: ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே, ஆர்க்டிக் பெருங்கடல் கரையோரம்.
அட்சரேகை: சுமார் 71.3° வடக்கு
இந்த நகரம் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான குடியிருப்புப் பகுதியாகும். உட்கியாக்விக் நகரில் இந்த ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் நவம்பர் 18 நிகழ்ந்துள்ளது. மீண்டும் 2027 ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி தான் சூரியன் மீண்டும் அடிவானத்திற்கு மேலே தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியன் ஏன் உதிப்பதில்லை?
ஏன் இங்கு மட்டும் சூரியன் உதிப்பதில்லை?
இதற்குப் பின்னால் இருப்பது பூமியின் அச்சு சாய்வு (Earth's Axial Tilt). பூமி சூரியனைச் சுற்றி வரும்போது அதன் அச்சு சுமார் 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக ஆண்டின் வெவ்வேறு காலங்களில் பூமியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு சூரிய ஒளி கிடைக்கும் அளவு மாறுபடுகிறது.
ஜூன் மாதத்தில் பூமியின் வடக்குப் பகுதி சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும். இதனால் வடக்கு அரைக்கோளத்தில் சூரிய ஒளி அதிக நேரம் கிடைக்கும். பகல் பொழுது நீண்டதாகவும், இரவு பொழுது குறுகியதாகவும் இருக்கும். இதனால் அங்கு கோடைக்காலம் ஏற்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் பூமியின் வடக்குப் பகுதி சூரியனுக்கு எதிர்த் திசையில் சாய்ந்திருக்கும். இதனால் வடக்கு அரைக்கோளத்திற்குச் சூரிய ஒளி குறைவான நேரமே கிடைக்கும். பகல் பொழுது குறைந்து, இரவு பொழுது நீண்டதாக இருக்கும். இதனால் குளிர்காலம் ஏற்படுகிறது.
ஆர்க்டிக் வட்டம்
துருவ இரவு (Polar Night)
ஆர்க்டிக் வட்டம் என்பது பூமியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட கற்பனைக் கோடு. இந்தக் கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில், டிசம்பர் மாதத்தில் பூமியின் வடக்குப் பகுதி சூரியனிடமிருந்து விலகிச் சாய்ந்திருப்பதால், சில இடங்களில் சூரியன் அடிவானத்திற்கு மேலே வருவதே இல்லை.
அதாவது, காலையில் சூரியன் உதித்து மாலையில் மறைவது போன்ற வழக்கமான நிகழ்வு அங்கு நடைபெறாது. 24 மணி நேரமும் இருள் அல்லது மங்கலான வெளிச்சம் நிலவலாம். இதைத்தான் அறிவியல் ரீதியாக Polar Night (துருவ இரவு) என்று அழைக்கிறார்கள்.
62 நாட்களும் முழுமையான இருள்தானா?
65 நாட்களும் அந்த நகரம் முழுமையான இருளில் மூழ்கியிருக்காது. சூரியன் அடிவானத்திற்கு மேலே வராவிட்டாலும், மதிய நேரத்தில் வானில் மங்கலான வெளிச்சம் காணப்படும். இதற்கு Civil Twilight (குடிமை அந்திப்பொழுது) என்று பெயர்.
அங்கு வசிக்கும் மக்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள்?
உட்கியாக்விக் நகரில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர் பூர்வகுடி இனமான இனுபியாட் (Inupiat) சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
- பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.
- அலுவலகங்கள், கடைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்குகின்றன.
- கடுமையான குளிரைச் சமாளிக்க வெப்பமூட்டும் வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- வெளியில் செல்லும்போது குளிரிலிருந்து பாதுகாக்கும் உடைகள் அணியப்படுகின்றன.
- வானிலை மற்றும் வெளிச்ச நிலையைப் பொறுத்து மக்கள் தங்களது அன்றாடப் பணிகளைத் திட்டமிடுகின்றனர்.















