ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவு... பிரதமர் மோடி இரங்கல்!!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜப்பான் பிரதமாராக இருந்த ஷின்சோ அபே உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவியில் இருந்த போது இந்தியா - ஜப்பான் இடையேயான உறவு மேம்பட்டு இருந்தது. பிற நாடுகளை காட்டிலும் ஷின்சோ அபே இந்தியாவுடன் நல்ல உறவு வைத்திருந்தார். இந்த நிலையில் ஜப்பானில் உள்ள நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மக்கள் மத்தியில் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஷின்சோ அபேயின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு - சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
ஷின்சோ அபேவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷின்சோ அபேவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஷின்சோ அபேவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ஜப்பான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். ஷின்சோ அபே உடனான எனது தொடர்பு பல ஆண்டுகளுக்கு முந்தையது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவரைப் பற்றி அறிந்தேன், நான் பிரதமரான பிறகும் எங்கள் நட்பு தொடர்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் பற்றிய அவரது கூர்மையான நுண்ணறிவு எனக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அண்மையில் நான் ஜப்பான் சென்றிருந்தபோது, எனக்கு அபேவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நாங்கள் பல விஷயங்களை விவாதித்தோம். அவர் எப்போதும் போல் புத்திசாலித்தனமாகவும் நுண்ணறிவுடனும் இருந்தார். மேலும் இது எங்கள் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை.
அவரது குடும்பத்தினருக்கும் ஜப்பானிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தியா-ஜப்பான் உறவுகளை உலகளாவிய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதில் அவர் மகத்தான பங்களிப்பை அளித்தார். இன்று, முழு இந்தியாவும் ஜப்பானுடன் வருந்துகிறது மற்றும் இந்த கடினமான தருணத்தில் எங்கள் ஜப்பானிய சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். ஷின்சோ அபேவுக்கு எங்களின் ஆழ்ந்த மரியாதையின் அடையாளமாக, 9 ஜூலை 2022 அன்று ஒரு நாள் இந்தியாவில் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும். டோக்கியோவில் எனது அன்பான நண்பர் ஷின்சோ அபேவுடன் நான் சமீபத்தில் சந்தித்த ஒரு படத்தைப் பகிர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யார் இந்த ஜப்பான் அரசியல்வாதி ஷின்சோ அபே?
இதேபோல் ஐ.நா. பொதுச்செயலாளர் பிளிங்கனும் ஷின்சோ அபேவின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரரது செய்திக்குறிப்பில், ஷின்சோ அபே சுடப்பட்டது மிகவும் சோகமான தருணம். அவருக்காக பிரார்த்தனைகள் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஷின்சோ அபேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அனைவரும் ஷின்சோவுக்காக பிரார்த்தனை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது எனவும் இந்த நேரத்தில் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்பதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஷின்சோ அபே: கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதி போல் சுற்றித்திரிந்த கொலையாளி
அபே ஆஸ்திரேலியாவின் சிறந்த நண்பர் மற்றும் போருக்குப் பிந்தைய காலத்தின் மிக முக்கியமான உலகளாவிய தலைவர்களில் ஒருவர். இந்த கடினமான நேரத்தில் எங்கள் பிரார்த்தனைகள் அவருடனும், அவரது மனைவி மற்றும் ஜப்பான் மக்களுடன் உள்ளன என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மோரிசன் ட்விட்டரில் எழுதியுள்ளார். ஷின்சோ அபே மறைவால் ஆழ்ந்த அதிர்ச்சிஅடைந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், நான் பிரதமரான போது சந்தித்த முதல் தலைவர்களில் அவரும் ஷின்சோ அபேவும் ஒருவர். ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். தாராள மனப்பான்மையுடனும் அன்பாகவும் இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.