Japan former PM Shinzo Abe shot dead - கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதி போல் சுற்றித்திரிந்த கொலையாளி
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். இதையடுத்து கழுத்தில் பலத்த காயமடைந்த ஷின்சோவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். இதையடுத்து கழுத்தில் பலத்த காயமடைந்த ஷின்சோவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
இவரை துப்பாக்கியால் சுட்டவரை அதே இடத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். சுட்டவர் 41 வயதாகும் டெட்சுயா யாமகாமி என்பதும், அந்த நாட்டின் கடற்படையில் பணியாற்றியவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர் துப்பாக்கியால் சுடுவதில் தேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாரா பகுதியில் வரும் ஞாயிறன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தனது கட்சியை ஆதரித்து நாரா ரயில் நிலையத்துக்கு வெளியே பேசிக் கொண்டு இருக்கும்போது சுடப்பட்டார். பின் பக்கம் இருந்து இரண்டு முறை சுடப்பட்டதில் நிலைகுலைந்து, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். குண்டுகள் அவரது கழுத்தை துளைத்ததில் மயங்கி விழுந்தார். உடனடியாக சுதாரித்த போலீசார் அந்த இடத்தில் இருந்து தப்ப முயன்ற டெட்சுயா யாமகாமியை கைது செய்தனர்.
ஷின்சோ அபேவை சுற்றிலும் போலீசார் இருந்தபோதும் நடந்த இந்த சம்பவம் ஜப்பான் நாட்டு மக்களை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்தியாவுடன் எப்போதும் நெருக்கமான உறவுடன் இருந்தவர் அபே. குவாட் அமைப்பிலும் இந்தியாவுக்கு ஆதரவாக எப்போதும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தவர். இது விஷயமாக பிரதமர் மோடியுடன் அடிக்கடி கலந்துரையாடி வந்துள்ளார்.
ஷின்சோ அபே அங்கு பேசிக் கொண்டு இருக்கும்போது கையில் துப்பாக்கியுடன் டெட்சுயா யாமகாமி சுற்றிக் கொண்டு இருப்பது வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. சாம்பல் நிற வண்ணத்தில் ஷர்ட் அணிந்து, கருப்பு நிறத்தில் பேக் மாட்டிக் கொண்டு, கண்ணாடி அணிந்து சுற்றி வந்துள்ளார்.
உயர் பாதுகாப்பில் இருக்கும் ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் சுடப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது என்று உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஜப்பான் பிரதமர் ஃபியுமியோகிஷிடா அளித்த பேட்டியில், ''இந்த செயல் காட்டுமிராண்டித்தனமானது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று கண்டித்துள்ளார்.
எங்களுக்கு ஜனநாயகம்தான் வேண்டும். வன்முறை அல்ல என்று ஜப்பான் நாட்டு மக்கள் இந்த சம்பவத்திற்கு பின்னர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜப்பான் பொதுவாக அரசியல் வன்முறை இல்லாத நாடு. துப்பாக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன.