ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: ஆதாரத்துடன் குற்றம்சாட்டும்அமெரிக்கா!
செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 1 வரையான நாட்களில் வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்படுகிறது
வட கொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளயது. ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையேயான ஆயுத ஒப்பந்தம் பற்றிய செய்திகளுக்கு மத்தியில், சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகை இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படங்களையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், சமீபத்திய வாரங்களில் வட கொரியா 1,000 க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு வழங்கியதாக அமெரிக்காவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான ராணுவ உறவைப் பற்றிய கவலைகளை எழுப்புவதாகவும் வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வட கொரிய வெடிமருந்துக் கிடங்கில் இருந்து ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பலில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் இரயில் மூலம் ரஷ்யாவின் தென்மேற்கு எல்லைக்கு அருகில் உள்ள சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று வெள்ளை மாளிகை கூறுகிறது.
இந்தப் பயணப் பாதையை விளக்கும் செயற்கைக்கோள் படங்களையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 1 வரையான நாட்களில் வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்படுகிறது.
ஆபரேஷன் அஜய்: 235 இந்தியர்களுடன் துருக்கியில் இருந்து டெல்லி வந்த 2வது விமானம்
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தாங்கள் வழங்கும் வெடிமருந்துகளுக்கு ஈடாக ரஷ்யாவின் மேம்பட்ட ஆயுதத் தொழில்நுட்பப் பகிர்வை கோரியிருப்பதாகவும் அமெரிக்கா கருதுகிறது. மேலும் ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆழமாகிவரும் ராணுவ உறவு கவலை அளிக்கிறது எனவும் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
அதிபர் விளாதிமிர் புடினைச் சந்திக்கவும், முக்கிய ராணுவ வசதிகளைப் பார்வையிடவும் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்குச் சென்றதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத ஒப்பந்தம் பற்றிய விவாதம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது. இந்த பயணத்தின்போது, இரு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டவை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை.
நாகை முதல் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்