நாகை முதல் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

40 ஆண்டுகளுக்குப் பின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

PM Modi inaugurated Passenger ferry from Nagai to Sri Lanka sgb

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசந்துறை செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட பிறகு இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த சேவையை காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

இதன் மூலம் சனிக்கிழமை காலை 7 மணிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி இருக்கிறது. கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அடி எடுத்துவைத்திருக்கிறோம். நமது நட்புறவை வலுப்படுத்துவதில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து முக்கிய மைல்கல்லாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

"நாகப்பட்டினம் மற்றும் அதனை ஒட்டிய நகரங்கள் கடல் வணிகத்திற்குப் பெயர் பெற்றவையாகத் திகழ்ந்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் துறைமுகம் பற்றிய பதிவுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. பட்டினப்பாலை, மணிமேகலை ஆகியவற்றில் இந்தியா - இலங்கை இடையே கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்து பற்றி பேசப்பட்டுள்ளது" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தக் கப்பல் போக்குவரத்து சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகளையும் திறக்கிறது என்றார். UPI மூலம் டிஜிட்டல் பேமெண்ட் இந்தியாவில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் லங்கா பே மற்றும் UPI ஆகியவற்றை இணைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

40ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பம் ஆக உள்ளது. இந்தக் கப்பல் போக்குவரத்து மூலம் நாகையில் இருந்து இலங்கைக்கு மூன்றரை மணிநேரத்தில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கப்பலில் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.6500. இத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.7670 பயணக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கப்பலில் 150 பேர் வரை பயணிக்க முடியும். முதல் நாளில் இந்தக் கப்பலில் காங்கேசன்துறை செல்ல 30 பேர் பதிவு செய்துள்ளனர். 26 பேர் நாகை வருவதற்கு முன்பதிவுசெய்திருக்கிறார்கள்.

முதல் நாள் சிறப்புச் சலுகையாக 75 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நபருக்கு ரூ.2375 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஜிஎஸ்டி சேர்த்து ரூ.2803 கட்டணம் பெறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios