துப்பாக்கிகள் ஏந்திய ஹமாஸ் தீவிரவாதிகளின் கோரப் பிடியில் இஸ்ரேல் குழந்தைகள்; நடுங்க வைக்கும் வீடியோ!!
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் பெண்கள், குழந்தைகளை சிறைபிடித்து இருப்பது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு ஹமாஸ் தீவிரவாதிகள் வெளியிட்டு இருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும், காசாவை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரிய போர் வெடித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் குழந்தைகள் மற்றும் பெண்களை பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இவர்களை விடுவித்தால்தான் காசாவுக்கு தண்ணீர், மின்சாரம், உணவு வழங்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கீறி, வயிற்றில் இருந்த குழந்தையை ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லும் பயங்கர வீடியோ வெளியாகி காட்டுமிராண்டித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியது. இந்த நிலையில், சர்வதேச அளவில் தங்களுக்கு நல்ல இமேஜ் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது புதிய வீடியோ ஒன்றை ஹமாஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை டெலிகிராம் ஆப் செயலியில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ராணுவ உடையில் கையில், மடியில் குழந்தைகளை வைத்துக் கொண்டு, துப்பாக்கியை கையில் தொங்கவிட்டவாறு ஹமாஸ் தீவிரவாதிகள் வீடியோவில் காணப்படுகின்றனர். ஒரு குழந்தைக்கு காலில் கட்டுபோடுவது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது. அழும் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டுவது என்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வீடியோ முடியும்போது, ஒரு குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து, பிஸ்மில்லா என்று கூறுமாறு வலியுறுத்துகின்றனர். குழந்தையும் பிஸ்மில்லா என்று கூறிவிட்டு, தண்ணீரை எடுத்து குடிக்கிறது. அதே குழந்தைதான் வீடியோவின் துவக்கத்தில் டேபிள் மீது அமர்ந்து, அழுது கொண்டு இருந்தது. அந்தக் குழந்தையின் காலில் ஹமாஸ் தீவிரவாதிகள் காயத்திற்கு கட்டு போடுகின்றனர்.
''ஹமாஸ் தீவிரவாதிகள் குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்து இருக்கின்றனர். அவர்களது அறைக்கு அருகே அந்தக் குழந்தைகளின் கொல்லப்பட்ட பெற்றோர் சடலம் இருக்கிறது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பயத்தில் அழுகின்றனர். இவர்கள்தான் தீவிரவாதிகள். இவர்களை தோற்கடிக்கப் போகிறோம்'' என்று பதிவிட்டுள்ளனர்.
காசா மிகச் சிறிய பகுதி. ஆனால், அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பல்வேறு இடங்களில் இஸ்ரேல் மக்கள் கடத்தி பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. இவர்களை எந்த விலையாவது கொடுத்து விடுவிப்போம் என்று இஸ்ரேல், அமெரிக்கா கூறி வருகின்றன. இதற்காக தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் தயாராகி வருகின்றனர்.
இந்தக் குழந்தைகளை தங்களுக்கு பாதுகாப்பு அரணாக ஹமாஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர் என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், மறுபக்கம் நாங்கள் அவர்களை கொடுமைப்படுத்தவில்லை நன்றாகத்தான் வைத்திருக்கிறோம் என்று உலகை நம்ப வைக்கும் செயலாக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாலஸ்தீனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு காசாவுக்குள் நுழைந்துள்ளனர். இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகள் 1,300 இஸ்ரேல் மக்களை கொன்று குவித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்பது தெரிய வந்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 580 குழந்தைகள் உள்பட 1800 காசா மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த 150 இஸ்ரேல் மக்களில் 13 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தரைப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் "பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களின் பகுதியை சுத்தப்படுத்த" மற்றும் "காணாமல் போனவர்களை" கண்டுபிடிப்பதற்காக உள்ளூர் சோதனைகளை மேற்கொண்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.