அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா–உக்ரைன் போருக்கான முக்கிய முடிவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா–உக்ரைன் போருக்கான தனது அடுத்த பெரிய முடிவு குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மிக முக்கியமான தீர்மானம் எடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டிரம்ப், "கிரெம்லினுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கலாமா அல்லது கியேவிடம் இது வாஷிங்டனின் போர் அல்ல என்று தெரிவிக்கலாமா? நான் முடிவெடுக்க வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களில் நிகழும் சூழ்நிலை என்ன முடிவை தீர்மானிக்கும்" என்றும் கூறினார்.

மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் சந்திப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். சமீபத்தில் உக்ரைனில் நடந்த ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க தொழிற்சாலை ஒன்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து கேட்கப்பட்டபோது, ​​டிரம்ப், "நான் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை. உண்மையில் அந்தப் போரைப் பற்றி எதிலும் மகிழ்ச்சி இல்லை," என்றார்.

மேலும், தானாகவே ஏழு போர்களை நிறுத்தியதாகவும், அதற்கு முன்னர் மூன்று போர்களை தடுத்து வைத்ததாகவும், மொத்தம் பத்து போர்களை தீர்த்துவிட்டதாகவும் டிரம்ப் கூறினார். குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட வாய்ப்பிருந்த அணு போரைத் தாம் தடுத்ததாகவும் அவர் மீண்டும் குறிப்பிட்டார்.

"இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் அது நடக்காமல் நாங்கள் தடுத்து வைத்தோம். அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது இருந்தது. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த ரஷ்யா–உக்ரைன் பிரச்சினை எந்த திசையில் சென்றாலும் நாங்கள் காணப்போகிறோம்” என்று டிரம்ப் மேலும் கூறினார்.

இதற்கிடையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், "உச்ச மட்டத்தில் பேச வேண்டிய பிரச்சினைகள் அனைத்தும் அதிகாரிகளால் முழுமையாக தீர்க்கப்பட்ட பிறகு, ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் சந்திக்கத் தயாராக உள்ளார்" என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.