இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்மானம் காசாவில் சர்வதேச அமைதிப் படையை அனுப்புதல், ஆயுதங்களை நீக்குதல், மறுசீரமைப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளாக நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்த 20 அம்ச திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யாவும், சீனாவும் வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன. எந்த நாடும் வீட்டோ (veto) அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.

இந்தத் தீர்மானம் காசாவுக்குள் பல நாடுகளின் அமைதிப் படையை அனுப்புவதற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த சர்வதேச அமைதிப் படையில் சேரப் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைதிப் படையின் பணிகள்

காசாவில் வாழ்வாதார நிலைத்தன்மையை உறுதி செய்தல், போர் ஆயுதங்கள் நீக்கத்தைக் கண்காணித்தல், முக்கியப் பகுதிகளைப் பாதுகாத்தல், நிவாரண உதவிகளை விநியோகிக்க உதவுதல், இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை இந்த அமைதிப்படையின் பணிகளாக இருக்கும்.

இதுபற்றி அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் பேசுகையில், இந்த சர்வதேச அமைதிப்படை பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதற்கும், ஆயுதங்களை நீக்குவதற்கும், பாலஸ்தீன பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொறுப்பேற்கும் என்று தெரிவித்தார்.

ஹமாஸ் போன்ற ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை நிரந்தரமாக ஒப்படைக்க வைக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். அத்துடன், ஹமாஸின் கீழ் தற்போது செயல்படும் காசா காவல்துறைக்கு மாற்றாக, புதிதாகப் பயிற்சி பெற்ற பாலஸ்தீன காவல்படை ஒன்றை உருவாக்கவும் இந்தத் தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.

அத்துடன், காசா மறுசீரமைப்பிற்காக, உலக வங்கியின் ஆதரவு பெற்ற நிதியத்தை உருவாக்குவதற்கும், காசா அமைதிக் கழகத்தை (Board of Peace) நிறுவுவதற்கும் இந்தத் திட்டம் முன்மொழிகிறது.

ஹமாஸ் அமைப்பின் நிராகரிப்பு

பாதுகாப்பு கவுன்சிலின் இந்தத் தீர்மானத்தை ஹமாஸ் அமைப்பு கடுமையாக நிராகரித்துள்ளது.

இந்தத் திட்டம் காசா மீது சர்வதேச நாடுகளின் அதிகாரத்தைத் திணிக்கிறது என்றும் இதை காசா மக்கள் நிராகரிக்கிறார்கள் என்றும் ஹமாஸ் டெலிகிராம் செய்தி மூலம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 69,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தற்காலிகப் போர் நிறுத்தத்தைத் தக்கவைத்துக்கொள்ள உலக நாடுகள் முயன்று வருகின்றன. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.