ஹெச்-1பி விசாவை ஒழித்துக் கட்டும் அமெரிக்கா! இந்தியர்களை வச்சு செய்யும் டிரம்ப்!
டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும் முயல்கிறது.

ஹெச்-1பி விசா திட்டம் ரத்து
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கான ஹெச்-1பி விசா (H-1B visa) திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தப் போவதாக குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் அறிவித்துள்ளார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் ஹெச்-1பி (H-1B) விசாவுக்கு ஆதரவாகப் பேசிய சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த மசோதா ஹெச்-1பி விசா திட்டத்தை படிப்படியாக நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
ஹெச்-1பி விசா வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணிபுரிய தற்காலிக அனுமதியை வழங்குகிறது. இந்த விசா, கிரீன் கார்டு மூலம் அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கான ஒரு பாதையாகவும் உள்ளது.
H-1B விசாவை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள்
குடியரசுக் கட்சியின் (GOP) தலைவரான கிரீன், நிறுவனங்கள் அமெரிக்கர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் H-1B விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள கிரீன், "பிக் டெக் (Big Tech), செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் (AI giants), மருத்துவமனைகள் மற்றும் தொழில்துறைகள் முழுவதும் அமெரிக்கர்களைத் தவிர்த்து வெளிநாட்டினரை பணியமர்த்த ஹெச்-1பி விசா திட்டத்தைத் தவறாக பயன்படுத்துகின்றன," என்றார்.
"இந்த மசோதா ஊழல் நிறைந்த ஹெச்-1பி திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டு தொழில்நுட்பம், சுகாதாரம், பொறியியல், உற்பத்தி உள்ளிட்ட அனைத்துத் தொழில்களிலும் மீண்டும் அமெரிக்கர்களுக்கே முதல் முன்னுரிமை அளிக்கும்!" என்றும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவத்துறைக்கு விதிவிலக்கு
இந்த மசோதாவின்படி, விசா காலாவதியானவுடன் அதன் வைத்திருப்போர் கட்டாயமாகத் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பச் செல்ல வேண்டும், அவர்களுக்கு குடியுரிமைக்கான வழி முற்றிலும் அகற்றப்படும்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற மருத்துவத் துறையினருக்கு மட்டும் வருடத்திற்கு 10,000 விசாக்கள் வழங்கப்படும். இந்த விதிவிலக்கும்கூட 10 ஆண்டுகளுக்குப் பிறகு படிப்படியாக நீக்கப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் நிலைப்பாடு
இந்த அறிவிப்பு வருவதற்குச் சில நாட்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில், ஹெச்-1பி விசா திட்டத்தின் தேவையை வலியுறுத்தினார். அமெரிக்காவில் போதுமான திறமைசாலிகள் இல்லை என்றும் வெளிநாட்டிலிருந்து திறமையானவர்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் இந்த விசா திட்டத்தில் பயனடைபவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.