அதிபர் டிரம்ப் H-1B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியுள்ளார். இந்த கட்டண உயர்வு மருத்துவத் துறையை பாதிக்கும் என்ற கவலைகளால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க டிரம்ப் அரசு பரிசீலித்து வருகிறது.

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான எச்-1பி விசா (H1-B visa) கட்டணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப், 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய்) உயர்த்தியிருப்பது, இந்தியா போன்ற நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னர் ரூ.1.75 லட்சமாக இருந்த H-1B விசா கட்டணம் எக்கச்சக்கமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வு, வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் மீதும், பணியாளர்கள் மீதும் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியது.

H-1B விசா கட்டண உயர்வு ஏன்?

அமெரிக்க குடிமக்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசு விளக்கமளித்தது. இந்த கட்டண உயர்வு, புதிய H-1B விசா பெறுவோருக்கும், விசா புதுப்பிப்போருக்கும் பொருந்தாது என்றும், இது ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணம் என்றும் அமெரிக்க அரசு தெளிவுபடுத்தியது.

மருத்துவத் துறைக்கு விலக்கு?

இந்த கட்டண உயர்வு பல்வேறு துறை நிபுணர்களின் கடும் எதிர்ப்புக்குள்ளானது. குறிப்பாக, இந்த நடவடிக்கை அமெரிக்காவின் மருத்துவத் துறையை கடுமையாக பாதிக்கும் என்று பல மருத்துவ அமைப்புகள் கவலை தெரிவித்தன. கிராமப்புறங்களில் ஏற்கனவே நிலவும் மருத்துவர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இந்தக் கவலைகளை கருத்தில் கொண்டு, H-1B விசா கட்டண உயர்வில் இருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க டிரம்ப் அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளை மாளிகை தகவல்

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் இதுகுறித்து கூறுகையில், "அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்படும். அதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டண உயர்வால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துகள் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பிறகே, இந்த விலக்கு எந்தெந்த மருத்துவப் பணியாளர்களுக்குப் பொருந்தும் என்பது குறித்து தெளிவு கிடைக்கும்.