அமெரிக்காவின் டெக்சாஸில் நிறுவப்பட்டுள்ள 90 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை, குடியரசுக் கட்சி தலைவர் ஒருவர் "பொய்யான கடவுள்" என விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு இந்து அமைப்புகளிடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி தலைவர் ஒருவர், டெக்சாஸில் அமைக்கப்பட்டுள்ள 90 அடி உயர ஆஞ்சநேயர் சிலை குறித்து கடும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், இந்தச் சர்ச்சை பதற்றத்தை அதிகரித்துள்ளது.
“பொய்யான கடவுள்”
டெக்சாஸில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயிலில் கடந்த ஆகஸ்ட் 2024-ல் "Statue of Union" (ஒற்றுமையின் சிலை) எனப் பெயரிடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை திறக்கப்பட்டது. வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுதான்.
இதுகுறித்து குடியரசுக் கட்சி தலைவர் அலெக்சாண்டர் டங்கன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாம் ஏன் ஒரு பொய்யான இந்து கடவுளின் சிலையை இங்கு டெக்சாஸில் அனுமதிக்கிறோம்? நாம் ஒரு கிறிஸ்தவ நாடு!" என்று தெரிவித்துள்ளார். மேலும், பைபிளில் இருந்து ஒரு வசனத்தையும் மேற்கோள் காட்டி, "என்னைத் தவிர வேறு கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது. வானத்திலோ, பூமியிலோ, கடலிலோ இருக்கும் எதற்கும் நீங்கள் சிலையோ, உருவமோ செய்யக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாவிற்கான கட்டணத்தை டிரம்ப் நிர்வாகம் ஒரு லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.89 லட்சம்) உயர்த்தியிருக்கும் நிலையில், அனுமன் சிலை குறித்த புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிற்கு எதிராக எடுத்து வரும் கடுமையான நிலைப்பாடு, இனவெறி மற்றும் மதவெறி பேச்சுகளுக்கு மத்தியில், டங்கனின் பேச்சும் இந்திய-அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடும் கண்டனம் தெரிவித்த இந்து அமைப்புகள்
டங்கனின் கருத்துக்கு இந்து அமெரிக்கன் ஃபவுண்டேஷன் மற்றும் இந்திய-அமெரிக்கர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் டங்கனின் பேச்சை "இந்துக்களுக்கு எதிரான கருத்து" என விமர்சித்துள்ளனர். மேலும், அந்த அமைப்பு டெக்சாஸில் உள்ள குடியரசுக் கட்சியின் எக்ஸ் பக்கத்திலும் கேள்வி எழுப்பியுள்ளது. "உங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக, வெளிப்படையாக இந்துக்கள் மீது வெறுப்புணர்வைக் காட்டும் உங்கள் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?" என அந்த அமைப்பு கேள்வி எழுப்புகிறது.
முந்தைய சர்ச்சைகள்
இதுபோல ஒரு சர்ச்சை உருவாவது இது முதல் முறையல்ல. டிரம்பின் உதவியாளரான பீட்டர் நவரோ கடந்த மாதம், ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம் "பிராமணர்கள்" லாபம் ஈட்டுவதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுவும் இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்காவில் நிலவி வரும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தியது.
வட அமெரிக்காவின் மிக உயரமான இந்த ஆஞ்சநேயர் சிலை திறக்கப்பட்டதிலிருந்து, டிரம்பின் "மேக் அமெரிக்கா கிரேட் அகைன்" (MAGA) இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. அவர்கள் இந்த சிலையை "அந்நிய தெய்வம்" என்றும், "அசுர உருவம்" என்றும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஒரு அமெரிக்கப் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் தலைப்பில் “பாதி குரங்கும் பாதி மனிதனுமாகத் தோன்றும் மிகப்பெரிய சிலை” எனக் குறிப்பிட்டுள்ளது.
