Asianet News TamilAsianet News Tamil

இன்று பூமி தினம்.. பூமி தினத்தின் வரலாறு என்ன..? நாம் ஏன் இந்த தினத்தை கொண்டாடுகிறோம்..?

இந்த ஆண்டுக்கான பூமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது..

Today is Earth Day.. What is the history of Earth Day..? What is its significance..?
Author
First Published Apr 22, 2023, 12:07 PM IST | Last Updated Apr 22, 2023, 12:07 PM IST

ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 22-ம் தேதி பூமி தினமாக கொண்டாடப்படுகிறது. பூமியையும், அதன் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு மக்கள் தங்கள் ஆதரவை நிரூபிக்க நேரம் ஒதுக்க வேண்டு என்ற நோக்கில் ஆண்டுதோறும் பூமி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பூமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.. 2023 ஆம் ஆண்டிற்கான புவி தினத்திற்கான கருப்பொருள் "எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள்" (Invest in our planet,) என்பதாகும். பூமிக்கான ஆரோக்கியமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு மக்களும் வணிகங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

அதே நேரத்தில் அனைவருக்கும் மிகவும் சமமான எதிர்காலத்தை நோக்கி செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று பூமி தினத்தை ஒருங்கிணைக்கும் earthday என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. வணிக நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பசுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 


பூமி நாள் என்றால் என்ன.?

முதல் பூமி நாள் 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி  கொண்டாடப்பட்டது. 1960களின் பிற்பகுதியில் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏற்பட்டன. பூமி தினத்திற்கான யோசனை முதலில் 1969 இல் பிறந்தது, கெய்லார்ட் நெல்சன் என்ற அமெரிக்க செனட்டர், அமெரிக்காவின் சாண்டா பார்பராவில் ஒரு பெரிய எண்ணெய் கசிவின் விளைவுகளை கண்டு வேதனை அடைந்தார். 1970 இல் சுற்றுச்சூழலுக்கான நிலைப்பாட்டை எடுக்க அனைத்து அமெரிக்கர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். மேலும் அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆரோக்கியமான, நிலையான பூமிக்காக போராட்டங்களை ஏற்பாடு செய்தன. இந்த தேசிய பேரணிகள் காரணமாக, முதல் பூமி தினம் கொண்டாட வழிவகை செய்தது.. மேலும் அமெரிக்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை என்ற அமைப்பை உருவாக்க உதவியது.. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

இதை தொடர்ந்து பூமியின் சுற்றுச்சூழலை காக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. ஆனாலும் கூட காலநிலை மாற்றம் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தால் 2030 - 2050 ஆண்டு வரை சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மறுபுறம், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 2100-ம் ஆண்டுக்குள், உலகில் காலநிலை பிரச்சனைகள் அதிகமாகும் என்றும், மேகவெடிப்பு, சுனாமி, பெருவெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் பல நாடுகள் அழியக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.. எனவே இந்த பூமி தினத்தில் பூமியை காக்க வேண்டும் அனைவரும் உறுதியேற்று, தங்களால் முடிந்த சிறிய மாற்றங்களை செயல்படுத்துவோம்.. மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூமியின் சுற்றுச்சூழலை காக்க துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.. 

 

இதையும் படிங்க : எடப்பாடி அணிக்கு தாவிய முக்கிய புள்ளி..காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios