இலங்கையில் தொடரும் மக்கள் போராட்டம்... நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டபய ராஜபக்சே!!
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பட்டினி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இலங்கையில் கடந்த மே மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரமாக மாறியது. ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று நாட்டின் அனைத்து துறை மக்களும் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டம் வலுத்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவி வகித்தார்.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் கோத்தபய ராஜபக்சே
இருந்த போதிலும் இலங்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியவில்லை. அவரும் கடுமையாக திணறினார். இந்த நிலையில் அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்சேவை விரட்டினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று இலங்கை முழுவதும் பிரசாரம் செய்யப்பட்டது. இலங்கை அரசு ஊழியர்கள், ராணுவத்தின் ஒரு பிரிவினர், புத்த மத குருக்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நேற்று முன்தினம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதை ஏற்று நேற்று காலை கொழும்பில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், ரெயில்களில் போராட்டக்காரர்கள் கொழும்பு வந்தனர். இதை அடுத்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
இதையும் படிங்க: சுற்றுலா தலமாக மாறிய அதிபர் மாளிகை! விளையாடி மகிழும் போராட்டக்காரர்கள்!
அதே சமயம் ஜனாதிபதி அலுவலகத்துக்குள்ளும் ஒரு பிரிவினர் புகுந்தனர். அதை தொடர்ந்து அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுக்க போராட்டம் நடந்தது. சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. போராட்டக்காரர்களை போலீஸ்காரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்றும் 2 ஆவது நாளாக கொழும்பில் போராட்டம் தொடர்ந்தது. மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பல்வேறு தெருக்களிலும் அணிவகுத்து வந்து கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டனர். சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.