இலங்கையில் கடந்த 11 நாட்களில் பெய்த தீவிர கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்று வருவதால், மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இலங்கையில் கடந்த 11 நாட்களில் பெய்த மிகத் தீவிரமான கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தனது மிகப் பெரிய வானிலை சார்ந்த பேரழிவுகளில் ஒன்றைச் சந்தித்து வருகிறது.

இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் (DMC) வியாழக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து

ஒரு பயங்கரமான சம்பவமாக, கும்புகானா (Kumbukkana) பகுதியில் வெள்ளநீர் உயர்ந்ததால், ஒரு பயணிகள் பேருந்து சிக்கிக்கொண்டது. எனினும், அவசரகாலக் குழுக்கள் உடனடியாகச் செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுப்பட்டன. இதனால் பேருந்தில் இருந்த 23 பயணிகளும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவங்களில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 'அதடெரானா' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை

நிலைமை மோசமடைந்து வருவதையடுத்து, நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் நிலவும் சூழலை மதிப்பிடுவதற்காக அதிபர் அனுர குமார திசநாயகே அவசரக் கூட்டத்தை நடத்தினார்.

வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, தீவின் தென்கிழக்கு எல்லையில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று "ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக" மாறியுள்ளது. இது தற்போது மட்டக்களப்பில் இருந்து 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

"இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற அதிக வாய்ப்புள்ளது," என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தீவின் பல பகுதிகளில் 200 மி.மீ.க்கும் அதிகமாக மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.