ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் வேதனையில் உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடலில் மீன்டிக்க செல்கின்றனர். மீனவர்கள் தங்கள் கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. நமது மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு ஒருமுறை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 14 மீனவர்களை கைது செய்தனர். ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாறி மாறி கடிதம் எழுதும் முதல்வர் ஸ்டாலின்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்பொதெல்லாம் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவதும், அதற்கு ஜெய்சங்கர் முதல்வருக்கு கடிதம் எழுதுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் மீனவர்கள் பிரச்சனைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
நிரந்த தீர்வு எப்போது?
சில மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. மேலும் இந்திய வந்த இலங்கை பிரதமரிடமும் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் நமது மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்து வருகிறது.
மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். தேர்தல்களின்போது இதை வைத்து அரசியலும் செய்கின்றனர். ஆனால் பிரச்சனையை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதே மீனவர்கள் குற்றச்சாட்டாக உள்ளது.
