இந்தியாவை பார்த்து பாகிஸ்தான், வங்கதேசம் எடுத்த அதிரடி முடிவு.. இனிமேல் தான் பெரிய சிக்கலே..!
கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை, இந்திய அரசாங்கம் மீட்டுவரும் நிலையில், நமது அண்டை நாடுகளும் அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் இதுவரை 52 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கடந்த 2-3 மாதங்களாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவில் மார்ச் 25ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை போலவே அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், அந்த நாடுகள் உட்பட பல்வேறு வெளிநாடுகளில் வேலை பார்த்துவந்த இந்தியர்கள், வேலையும் இல்லாமல், அதனால் வருமானமும் இல்லாமல் தவித்துவந்தனர்.
எனவே ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசிய என உலகின் பல்வேறு நாடுகளில், ஊரடங்கால் சிக்கி தவித்த இந்தியர்களை விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் இந்திய அரசாங்கம் மீட்டுவருகிறது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து அவர்களுக்கு கொரோனா இல்லையென்று உறுதி செய்யப்பட்ட பிறகே வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளிலிருந்து சுமார் 4 கோடி பேர் உலகின் பல்வேறு நாடுகளில் வேலை பார்க்கின்றனர். குறிப்பாக துபாய், அபுதாபி, பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் தான் தெற்காசிய நாடுகளை சேர்ந்த பலர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை இந்திய அரசாங்கம் மீட்டுவரும் நிலையில், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளும், வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான இட வசதிகளையும் அந்த நாடுகள் ஏற்பாடு செய்துவருகின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமல்லாது விசா முடிந்து சிக்கியுள்ளவர்கள், மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரையும் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நேபாளத்தை சேர்ந்த 4 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரபு நாடுகளில் தெற்காசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் கட்டிட தொழிலில் தான் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். உலக வங்கியின் ரிப்போர்ட்டின் படி, தெற்காசிய நாடுகளின் ஜிடிபி-யில் சுமார் 60% புலம்பெயர் தொழிலாளர்கள் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கால், புலம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் சிலர், நிலைமை சீரடைந்தவுடன் மீண்டும் தாங்கள் இருந்த நாடுகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. பெரும்பாலானோருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்பதால், அவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவது, தெற்காசிய நாடுகளின் முன்னிருக்கும் சவால்.
குறிப்பாக பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாட்டை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் வேலையிழப்பார்கள். அவர்கள் நாட்டில் அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதும் கஷ்டம் ஆகும். இலங்கைக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களில் 10 ஆயிரம் பேருக்கு திரும்ப வேலை கிடைப்பது கடினம் என இலங்கையின் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.