இலங்கையின் அதிபர் போட்டியில் இருந்து விலகிய சஜித் பிரேமதாசா பிரதமராவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கையில் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்து பணவீக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. எரிபொருட்கள் விலை அதிகரித்து, மக்கள் சைக்கிளில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். இதற்கு காரணம் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே என்று இலங்கை மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
நாட்டின் வளர்ச்சிக்ககாக வாங்கப்பட்டு இருந்த 78 மில்லியன் டாலர் கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் கோத்தபய ராஜபக்சே அரசாங்கத்தின் நிர்வாகத்திறன்மை இன்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இலங்கை திவால் நிலையில் இருப்பதாக தெற்கு ஆசிய நாடுகளின் மத்திய வங்கி அறிவித்தது.
வெளிநாடுகளில் வாங்கிய 50 பில்லியன் டாலர் கடனை அடைக்க முடியாமல், கடனை எதிர்பார்த்து நின்றது. இச்சமயத்தில் கையில் இருந்த அந்நிய செலவாணி இருப்பும், கரைந்தது. பண வீக்கம் அதிகரித்தது. இறக்குமதி பொருட்களுக்கு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் பணம் இல்லாததால், முக்கிய அத்தியாவசியப் பொருட்களான பால் பவுடர், பால், மருந்து, எரிபொருள், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
மக்களின் போராட்டம் வெடித்தது. முதல் ஆளாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினா செய்தார். இவரைத் தொடர்ந்து இவரது இரண்டு சகோதர்கள் சமல் ராஜபக்சே, பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, சமல் ராஜபக்சேவின் மகன் ஷஷீந்திரா இருவரும் ராஜினாமா செய்தனர்.
இலங்கை அதிபர் தேர்தல்: திடீரென சஜித் பிரேமதாசா வாபஸ்; உருவானது மும்முனைப் போட்டி!!
தொடர்ந்து போராட்டம் வெடிக்கவே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் கடந்த 13ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாலத்தீவு தப்பிச் சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் இவருக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை. 15 நாட்களுக்கு தங்குவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமராக பொறுப்பேற்று இருந்த ரணில் விக்ரசிங்கேவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு அவரது வீட்டை எரித்தனர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், இடைக்கால அதிபராக இவரை கோத்தபய தேர்வு செய்து இருந்ததால், இவர் தற்போது இடைக்கால அதிபராக இருக்கிறார். நாளை அதிபருக்கான தேர்தல் நடக்கிறது. அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அவர் அதிபர் போட்டிக்கு போட்டியிடுவதில்லை என்று வாபஸ் பெற்றுக் கொண்டார். ராஜபக்சேவின் கட்சியைச் சேர்ந்த டலஸ் அலஹப்பெருமவை தேர்வு செய்வதற்கு ஆதரவு அளிக்கப்போவதாக சஜித் அறிவித்துள்ளார்.
டலஸ் அலஹப்பெருமவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து இந்தக் கட்சியின் தலைவர் ஜிஎல் பெய்ரிஸ் அளித்த பேட்டியில், ''அதிபர் பதவிக்கு டலஸ் அலஹப்பெருமவுக்கும், பிரதமர் பதவிக்கு சஜித் பிரேமதாசாவுக்கும் ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஸ்டம் மாற வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஏற்றார் போல் அனைத்துக் கட்சிகளும் ஆட்சி செய்யும் வகையில் அரசாங்கம் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களது கட்சியில் எந்தப் பிரிவினையும் இல்லை'' என்றார்.
இந்த தேர்தல் முடிந்த பின்னர் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சஜித் பிரேமதாசாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி தற்போது இரண்டாக உடைந்துள்ளது. ஒரு பிரிவு ஜிஎல் பெய்ரிஸ்க்கு பின்னும், மற்றொரு பிரிவு எம்பி தினேஷ் குணவர்த்தனா பின்பும் இருக்கிறது. இவர்களில் தினேஷ் குணவர்த்தன, அதிபராக ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். ஜிஎல் பெய்ரிஸ் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு போதிய எம்பிக்கள் இல்லாவிட்டாலும், சிறிய கட்சிகள் ஆதரவு கொடுக்கும் என்று கூறப்படுகிறது. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பார்லிமெண்டில் ராஜபக்சேவின் கட்சிக்கு 115 உறுப்பினர்கள் உள்ளனர்.
Last Updated Jul 19, 2022, 4:39 PM IST