நிலநடுக்கங்களைச் சரியான நேரத்தில் துல்லியமாகக் கணிப்பது இப்போதைக்கு சாத்தியமற்றது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு துருக்கி-சிரியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது. இதில் இரண்டு நாடுகளையும் சேர்த்து 59,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வே (SSGEOS) அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹூகர்பீட்ஸ் என்பவர் இங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்று முன்பே கூறியிருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

துருக்கி-சிரியாவில் கடுமையான நிலநடுக்கம்; முன்பே கணித்த நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்

அதாவது நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு மத்திய-தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் என்று அவர் கூறியிருந்தார். அவர் கூறியபடியே நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்.

மார்ச் 10-ம் தேதி மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும்?

இந்த நிலையில், இதே நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹூகர்பீட்ஸ் கோள்களின் சீரமைப்பு மற்றும் சந்திரனின் உச்சநிலை ஆகியவற்றின் அடிப்படையில், மார்ச் 10-ம் தேதி (நாளை) மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என கணித்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கடந்த இரண்டு நாட்களில் கோள்களின் உச்சநிலையைத் தொடர்ந்து இன்று சந்திரனின் உச்சநிலை உள்ளது, இது ஏற்கனவே வலுவான நிலநடுக்கங்களின் தொகுப்பைத் தூண்டியுள்ளது. மார்ச் 10-ம் தேதியை ஒட்டி ஒரு பெரிய நில அதிர்வு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது'' என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.

நிபுணர்கள், விஞ்ஞானிகள் திட்டவட்டமாக மறுப்பு

பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய துருக்கி-சிரியா நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்து இருந்ததால் பிராங்க் ஹூகர்பீட்ஸின் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நிலநடுக்க ஆய்வாளர்களும், நிபுணர்களும் இவரது கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அறிவியல் பூர்வமாக இத்தகைய கணிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணிக்க முடியுமா?

நிலநடுக்கங்களைச் சரியான நேரத்தில் துல்லியமாகக் கணிப்பது இப்போதைக்கு சாத்தியமற்றது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரலாற்றுத் தரவுகள் மற்றும் புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பகுதியில் நீண்ட கால இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை விஞ்ஞானிகளால் மதிப்பிட முடியும்.

ஆனால் அங்கு இந்த நாளில் நிலநடுக்கம் ஏற்படுவதை கணிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே ஆதாரமற்ற தகவல்களை, கணிப்புகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என பிராங்க் ஹூகர்பீட்ஸ்க்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.