அமெரிக்கத் தடைகள் காரணமாக ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் தள்ளுபடியை அதிகரித்துள்ளது. இது இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் எண்ணெய் வாங்க வாய்ப்பளிக்கிறது.
உலக அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் காரணமாக, ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கும் கச்சா எண்ணெய் தள்ளுபடியை அதிகரித்துள்ளது. தற்போது, ரஷ்யாவின் "உரல்ஸ் கிரேடு" கச்சா எண்ணெய் விலை, சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் டேட்டட் பிரெண்ட் எண்ணெய்விட சுமார் $5 வரை குறைவாக உள்ளது.
இது இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் எரிபொருள் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது. அமெரிக்காவின் புதிய தடைகள் காரணமாக, சில அரசுக்கு சொந்தமான இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் தாமதிக்கலாம். இதனால், தனியார் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்கி வருகின்றன.
இது உள்ளூர் சந்தையில் தாராளமான எரிபொருள் விநியோகத்திற்கு வழிவகுக்கிறது. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, குறுகிய காலத்தில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்காக ரஷ்யா விநியோகத்தை உயர்த்தவுள்ளது. இதனால் எண்ணெய் விலை மேலும் குறையலாம் என கணிக்கப்படுகிறது.
இந்தியாவால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு, 2025 மே மாதத்தில் ஒரு நாளுக்கு 2.25 லட்சம் பீப்பாய்கள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இது தொடக்கத்திலிருந்து இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய எண்ணெய் தள்ளுபடியும், விநியோகம் அதிகரிப்பதும் இந்திய அரசுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் இந்த நன்மை நேரடியாக மக்களுக்கு செல்ல வேண்டும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும். இல்லை என்றால் சர்வதேச விலை குறைந்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலைகள் உயர்ந்தவாறே தொடரும்.
