ஈரானின் எரிவாயு கிடங்குகளில் இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையே மோதல் உச்சமடைந்து வருகிறது.
Israel Bombs Iran Gas Fields: மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல், ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் முதலில் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள். ஏவுகணை சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் அணு விஞ்ஞானிகள் உளட பலர் உயிரிழந்தனர். இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது.
இஸ்ரேல்-ஈரான் இடையே கடும் மோதல்
ஏவுகணை, டிரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் கடும் தாக்குதலை தொடுத்தது. ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததில் சிலர் உயிரிழ்ந்தனர். இன்று 2வது நாளாக இஸ்ரேல், ஈரான் இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைக்கு இடையில் இரவு முழுவதும் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக ஈரானிய அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் எரிவாயு கிடங்கில் இஸ்ரேல் தாக்குதல்
இந்த விமான நிலையம் இராணுவ மற்றும் சிவில் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அங்குள்ள இராணுவ ஜெட் விமானங்களுக்கான ஹேங்கர் குறிவைக்கப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. பதிலுக்கு ஈரானும் தாக்குவதால் இஸ்ரேலில் ஏராளமான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரானின் தெற்கு புஷெர் மாகாணத்தில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கில் இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பற்றி எரியும் எரிவாயு கிடங்குகள்
இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்கி, அதன் இலக்குகளை விரிவுபடுத்துவதாக புரட்சிகர காவல்படையுடன் இணைந்த ஈரானிய ஊடகமான ஃபார்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் புதிய இலக்குகளில் பாரசீக வளைகுடாவில் உள்ள புஷெர் மாகாணத்தில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மற்றும் அசலூய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அடங்கும். தெற்கு பார்ஸில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயணைப்பு வாகனங்கள் வந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
உலக நாடுகள் கோரிக்கை
ஈரானும், இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஐநா, பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இரு நாடுகளும் இதற்கு செவி சாய்க்க மறுக்கின்றன. இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியுள்ளது. ஈரான் தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் தெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
