வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் காலாவதியான தேதி அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுவதாகக் கூறி பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் காலாவதியான தேதி (Expiry Date) அச்சிடப்பட்டிருந்த படங்கள் வெளியாகியுள்ளன. இது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலவதியான பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் எக்ஸ் தளத்தில் நிவாரணப் பொருட்கள் கொண்ட சரக்குகளின் புகைப்படங்களைப் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே இந்தக் கண்டனங்கள் வெடித்தன.
வெளியிடப்பட்ட படத்தில் உள்ள பல பொட்டலங்களின் லேபிள்களில் "EXP: 10/2024" (அதாவது, காலாவதி: அக்டோபர் 2024) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
"அக்டோபர் 2024" என்பது ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், சமீபத்திய பெரும் வெள்ளப் பேரிடரைச் சந்திக்கும் ஒரு நாட்டிற்கு காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக சமூக ஊடகப் பயனர்கள் குற்றம் சாட்டினர்.
"நாங்கள் எப்போதும் ஒன்றாக நிற்கிறோம், பாகிஸ்தான் இன்றும் எப்போதும் இலங்கையுடன் நிற்கிறது," என்று உயர் ஆணையம் பதிவிட்டிருந்த செய்தி, தாங்கள் பதிவேற்றிய படங்களால் உடனடியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவற்றின் காலாவதி காலம் முடிந்த பொருட்களை அனுப்பியது பேரிடர் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயல் என்றும் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். லேபிள்களைப் பரிசோதிக்காமல், உயர் ஆணையம் ஏன் பொதுவெளியில் படங்களைப் பதிவிட்டது என்றும் பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்தச் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தியாவின் நிவாரண உதவி
பாகிஸ்தானின் நிவாரணப் பொருட்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில், ‘டிட்வா' புயலால் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம், உயிரிழப்புகள் மற்றும் மிகப் பெரிய பாதிப்புகளுக்குப் பிறகு, அந்நாட்டை ஆதரிக்கும் வகையில் இந்தியா நிவாரண உதவிகள் அனுப்புவதைத் தீவிரப்படுத்தியுள்ளது.
'ஆபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) திட்டத்தின் கீழ், நவம்பர் 28 முதல், விமானம் மற்றும் கடல் வழிகள் மூலம் 53 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) தகவலின்படி, இலங்கையில் சிக்கித் தவித்த 2,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய விமானப்படையின் சரக்கு விமானம் மற்றும் ஐ.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் உதைகிரி, ஐ.என்.எஸ் சுகன்யா உள்ளிட்ட கடற்படைக் கப்பல்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன் திரிகோணமலைக்கு ஐ.என்.எஸ். சுகன்யா கப்பல் வந்தடைந்த புகைப்படத்தையும் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கிறார்.


